- Home
- Career
- CBSE சமூக அறிவியல் தேர்வு: மனப்பாடம் மட்டும் போதாது.. 100/100 வாங்க ஆசிரியர்கள் சொல்லும் 'சீக்ரெட்' டிப்ஸ் இதோ!
CBSE சமூக அறிவியல் தேர்வு: மனப்பாடம் மட்டும் போதாது.. 100/100 வாங்க ஆசிரியர்கள் சொல்லும் 'சீக்ரெட்' டிப்ஸ் இதோ!
CBSE 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்களின் முக்கிய டிப்ஸ். வரலாறு, வரைபடம் மற்றும் பதில்களை எழுதும் முறைகள் உள்ளே.

CBSE இது நினைவாற்றல் சோதனை அல்ல, புரிதல் சோதனை!
பொதுவாகச் சமூக அறிவியல் பாடம் என்றாலே, மாணவர்கள் அதை ஒரு நினைவாற்றல் சோதனையாகவே பார்க்கிறார்கள். ஆனால், சிபிஎஸ்இ (CBSE) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வைப் பொறுத்தவரை, இது உங்கள் 'முடிவெடுக்கும் திறனுக்கான' (Test of Judgement) சோதனை என்பதே உண்மை. எதை எழுத வேண்டும், எதை விட வேண்டும், எங்கு நிறுத்த வேண்டும் என்பதை அறிவதே வெற்றிக்கு வழி. 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு வரும் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வரலாறு, புவியியல், குடிமையியல் மற்றும் பொருளியல் ஆகிய நான்கு பிரிவுகளிலும் எப்படி அதிக மதிப்பெண்களை அள்ளுவது என்பது குறித்துப் பல்வேறு பள்ளி ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகளை இங்கே காண்போம்.
வரலாறு: மனப்பாடம் வேண்டாம், காலவரிசை முக்கியம்!
வரலாற்றுப் பாடத்தில் மாணவர்கள் தகவல்களையும், வருடங்களையும் தெரிந்து வைத்திருந்தாலும், அதை வரிசைப்படுத்துவதில் தான் கோட்டை விடுகிறார்கள். காசியாபாத் உத்தம் பள்ளியின் ஆசிரியை சப்னா கௌஷிக் கூறுகையில், "ஐரோப்பாவில் தேசியவாதம், இந்தியாவில் தேசியவாதம் போன்ற பாடங்களைப் படிக்கும்போது, நிகழ்வுகளைக் காலவரிசைப்படி (Chronology) நினைவில் கொள்வது அவசியம். குருட்டு மனப்பாடம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்," என்கிறார். ஒவ்வொரு பாடத்திற்கும் 'கருத்து வரைபடங்கள்' (Concept Maps) மற்றும் காலக்கோடுகளை உருவாக்கி வைத்துக்கொண்டால், தேர்வுக்கு முன் திருப்புதல் செய்ய எளிதாக இருக்கும். மேலும், வரைபடம் (Map) சார்ந்த கேள்விகளைத் தவறவிடக் கூடாது, ஏனெனில் அதில் தான் முழு மதிப்பெண்களை எளிதாகப் பெற முடியும்.
புவியியல்: துல்லியம் தான் வெற்றியின் ரகசியம்!
புவியியலில் பொதுவான கதைகளை எழுதினால் மதிப்பெண் கிடைக்காது. ஆசிரியை மால்விகா டேனியல் இது குறித்துப் பேசுகையில், "புவியியலை ஒரு பாடமாகப் பார்க்காமல், நம்மைச் சுற்றியுள்ள உலகின் கதையாகப் பாருங்கள். மண் வளம், போக்குவரத்து, விவசாயம் போன்றவற்றை உங்கள் நிஜ வாழ்வோடு ஒப்பிட்டுப் படியுங்கள்," என்கிறார். குறிப்பாக, வளங்கள் மற்றும் மேம்பாடு, விவசாயம், கனிம வளங்கள் போன்ற பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். வரைபடப் பயிற்சியில் ஆறுகள், அணைகள் மற்றும் பயிர் விளையும் பகுதிகளைத் துல்லியமாகக் குறிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கையெழுத்துத் தெளிவாகவும், முக்கிய வார்த்தைகள் அடிக்கோடிடப்பட்டும் இருந்தால் கூடுதல் கவனம் கிடைக்கும்.
குடிமையியல்: கட்டுரையாக எழுதாதீர்கள், பாயிண்ட்ஸ் முக்கியம்!
குடிமையியல் (Political Science) பதில்கள் பெரும்பாலும் கட்டுரைகள் போல நீண்டு கொண்டே செல்வது தான் மாணவர்கள் செய்யும் தவறு. சன்பீம் பள்ளியின் ஆசிரியர் அனுராக் தாக்கூர் கூறுகையில், "கேள்வியை நன்றாகப் படித்து, தேவையானதை மட்டும் பாயிண்டுகளாக (Points) எழுதுங்கள். அதிகாரப் பகிர்வு, கூட்டாட்சி, அரசியல் கட்சிகள் போன்ற பாடங்களில் வரையறைகள் (Definitions) தெளிவாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு கையெழுத்தைச் சிதைப்பதையோ, வடிவத்தை மாற்றுவதையோ தவிர்க்க வேண்டும்," என்று அறிவுறுத்துகிறார். ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு தெளிவான தொடக்கமும் முடிவும் இருக்க வேண்டும்.
பொருளியல்: வரைபடங்கள் மற்றும் உதாரணங்களுடன் விளக்குங்கள்!
பொருளாதாரம் படிக்கும்போது புரிந்து கொள்ளாமல் படித்தால் அது மறந்துவிடும். ஆசிரியை சுரபி கர்க் கூறுகையில், "சிபிஎஸ்இ தற்போது திறன் சார்ந்த கேள்விகளுக்கு (Competency-based questions) அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, வரையறைகளை மட்டும் படிக்காமல், அதை நிஜ உலக உதாரணங்களுடன் இணைத்துப் படிக்க வேண்டும்," என்கிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் மனித மேம்பாட்டுச் குறியீடு (HDI) போன்றவற்றை எக்காரணம் கொண்டும் குழப்பிக் கொள்ளக் கூடாது. வரைபடங்கள் (Diagrams) மற்றும் தரவுகளை விளக்கும் கேள்விகளைத் தவிர்ப்பது மதிப்பெண்களைக் குறைக்கும்.
இறுதி நேர டிப்ஸ்
தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதியவற்றைப் படிப்பதை விடப் படித்ததைத் தெளிவாகத் திருப்புதல் செய்வது சிறந்தது. என்சிஇஆர்டி (NCERT) புத்தகங்களை முழுமையாகப் படித்து, மாதிரி வினாத்தாள்களை எழுதிப் பழகுங்கள். சமூக அறிவியல் கடினமான பாடம் அல்ல, அது நம் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் பாடம் என்ற எண்ணத்தோடு அணுகினால் 100 மதிப்பெண்கள் உறுதி!

