வீட்டில் Cosmetic பொருட்கள் தயாரிப்பு! உரிமம் இல்லாமல் செய்தால் என்னவாகும் தெரியுமா?!
வீட்டில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் பெரும்பாலும் உரிமம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இது சட்டவிரோதமானது மற்றும் தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டு துறையின் கண்காணிப்புக்கு உள்ளாகும்.

வீட்டில் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு
இன்றைய சூழலில் பலர் வீட்டிலேயே இயற்கையான முறையில் முகக் கிரீம், சோப்பு, பவுடர், உதட்டு சாயம், தலைமுடி எண்ணெய் போன்ற அழகு சாதன பொருட்களை தயாரித்து வருகின்றனர். இவை பெரும்பாலும் “ஹோம் மேட்” எனும் பெயரில், யாரும் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான மற்றும் இயற்கையான தயாரிப்புகள் என விளம்பரப்படுத்தப்படுகின்றன. சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம், யூ டியூப், ஃபேஸ்புக் போன்றவற்றில் இது மிகவும் பிரபலமாகி வருகின்றது. இந்நிலையில், வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தி விற்பனை செய்வதுடன், நல்ல வருமானமும் ஈட்டப்படுகிறது.
உரிய அனுமதியின்றி தயாரித்தல் சட்ட விரோதம்
வீட்டில் தயாரித்து விற்கப்படும் இத்தகைய பொருட்கள் பெரும்பாலானவை அரசு தரச்சான்றுகள் அல்லது உரிமங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இது இந்தியாவின் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம், 1940 மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளின் கீழ் சட்டவிரோதமானதாகும். தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டு துறையின் கூற்றுப்படி, உரிய அதிகார அங்கீகாரம் பெறாமல் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதும், விற்பனை செய்வதும் தண்டனைக்கு உட்பட்ட குற்றமாகும்.
கண்காணிப்பு தீவிரம்
தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பலர் வீட்டிலேயே அழகு சாதன பொருட்களை தயாரித்து வருகின்றனர். இதைத் தடுக்கும் நோக்கில் மருந்து கட்டுப்பாட்டு துறை திடீர் ஆய்வுகள், சோதனைகள் நடத்தி வருகின்றது. உரிமம் இல்லாமல் தயாரிக்கும் மையங்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வருவதாகவும் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறினர்.
உரிமம் பெற வேண்டிய அவசியம்
அழகு சாதன பொருட்கள் தயாரிக்க விரும்புவோர், கட்டாயமாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெறாமல் தயாரித்தல் மட்டும் அல்லாமல், தயாரிப்பில் BIS (Bureau of Indian Standards), GMP (Good Manufacturing Practices) போன்ற தர உத்தரவுகளை பின்பற்றாததும் குற்றமாகும். வீட்டு மாடிகளில் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் தயாரிப்பு நடைபெறக் கூடாது. இதற்கென்று தனி உற்பத்தி இடம், சுகாதாரமான சூழல் ஆகியவை இருக்க வேண்டும்.
தயாரிப்பில் அடங்க வேண்டிய விவரங்கள்
- தயாரிப்பு தேதி
- பயன்படுத்தும் பொருட்களின் விவரங்கள்
- தயாரிப்பு செய்யும் நபரின் முழு முகவரி
- உரிமம் பெற்றதற்கான விவரம் (license number)
உரிமம் பெறும் முறை
வீட்டில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க விரும்புவோர், https://www.drugscontrol.tn.gov.in/ என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். உரிமம் பெறுவதற்குப் பிறகு, அது 5 ஆண்டுகள் செல்லுபடியாகும். துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்டத் தளங்களில் நேரில் ஆய்வு செய்து, உற்பத்தி முறைகள் மற்றும் தரநிலைகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்கின்றனர்.
சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் – கண்காணிப்பு தீவிரம்
பலரும் இணையத்தில் இயற்கையான தயாரிப்புகளுக்கான விளம்பரங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் உரிய அனுமதியின்றி இதைச் செய்தால், அந்த விளம்பரத்தையும் முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் பலரும் தங்களது தயாரிப்பு பக்கங்களை நீக்கிவிட்டனர் என்ற தகவலும் வந்துள்ளது.
வீட்டுத் தொழில் முனைவோர்களுக்கு முக்கிய அறிவுரை
வீட்டில் இயற்கையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பெண்கள், தொழில் முனைவோர், சிறு தொழில் செய்ய விரும்புவோர் அனைவரும் இதை ஒரு முக்கிய எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். உரிமம் இல்லாமல் செய்கிறீர்கள் என்றால், அது உங்கள் தொழிலுக்கு தடையாக மட்டுமல்ல, சட்ட சிக்கல்களையும் உருவாக்கும்.
அனுமதி பெற்று தொடங்கினால் சாதிக்கலாம்
இயற்கை மற்றும் ஹோம் மேட் அழகு சாதன பொருட்களுக்கு இன்று பெரும் வரவேற்பு உள்ளது. இது ஒரு நல்ல தொழில் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் சட்டப்படி உரிய அனுமதிகளை பெறுவதும், தரநிலைகளை பின்பற்றுவதும் மிகவும் அவசியம். இவை இல்லாமல் தயாரிப்பதும் விற்பனை செய்வதும், உங்களுக்கும், உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்கும்.அதனால், சட்டப்படி உரிமம் பெற்றுத் தொழிலைத் தொடங்குங்கள், நம்பிக்கையுடன் வளருங்கள்!