ரிஸ்க் எடுக்க பயமா இருக்கா? அரசாங்கமே கேரண்டி தரும் இந்த 3 திட்டத்துல முதலீடு பண்ணுங்க!
மத்திய அரசின் முழு உத்தரவாதத்துடன் 7%க்கும் அதிகமான வட்டி வழங்கும் மூன்று முக்கிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. அவற்றின் வட்டி விகிதங்கள், சிறப்பம்சங்கள் மற்றும் வரிச் சலுகைகள் பற்றி இந்த கட்டுரை விவரிக்கிறது.

மூன்று போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்
இந்தியப் பொருளாதாரம் மாறிவரும் சூழலில், மக்கள் இப்போது பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தரும் முதலீடுகளைத் தேடி ஓடுகிறார்கள். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்குப் பயப்படுபவர்களுக்கு, மத்திய அரசின் முழு உத்தரவாதத்துடன் 7 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி தரும் தபால் நிலைய (Post Office) சேமிப்புத் திட்டங்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
அவற்றில் முக்கியமான 3 திட்டங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
போட்ட பணம் அப்படியே டபுள்!
1. கிசான் விகாஸ் பத்ரா (KVP)
உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்தத் திட்டம்.
• வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.5% கூட்டு வட்டி.
• சிறப்பம்சம்: இந்தத் திட்டத்தில் நீங்கள் போடும் பணம் சுமார் 115 மாதங்களில் (9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள்) அப்படியே இரட்டிப்பாகும்.
• உதாரணம்: நீங்கள் ₹10,000 முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் ₹20,000 ஆகத் திரும்பப் பெறலாம். இதற்கு அரசின் முழு கேரண்டி உண்டு.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு!
2. சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY)
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காகச் சேமிக்க விரும்புபவர்களுக்கு இதுவே டாப் சாய்ஸ்.
• வட்டி விகிதம்: சந்தையில் மற்ற திட்டங்களை விட அதிகமாக 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
• கால அளவு: பெண் குழந்தையின் பெயரில் கணக்கு தொடங்கி 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்தலாம். 21 ஆண்டுகள் வரை கணக்கு செயல்பாட்டில் இருக்கும்.
• வரி சலுகை: இதில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை, அதற்கு கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை என அனைத்திற்கும் வருமான வரி விலக்கு உண்டு.
பாதுகாப்பான நிலையான வருமானம்!
3. தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC)
குறுகிய கால அளவில் (5 ஆண்டுகள்) நிலையான லாபம் மற்றும் வரி சேமிப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏற்றது.
• வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.7% கூட்டு வட்டி.
• உதாரணம்: நீங்கள் ₹10,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் அது சுமார் ₹14,490 ஆக உயரும்.
• வரி சலுகை: வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் ₹1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
போஸ்ட் ஆபீஸ் திட்டங்களின் சிறப்புகள்
1. முழு பாதுகாப்பு: மத்திய அரசால் நிர்வகிக்கப்படுவதால் உங்கள் பணத்திற்கு 100% பாதுகாப்பு உண்டு.
2. அதிக வட்டி: வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட்டுகளை விட (FD) பல சமயங்களில் இதில் வட்டி அதிகம்.
3. வரி சேமிப்பு: நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான வரியைக் குறைக்க இவை பெரிதும் உதவுகின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

