- Home
- Business
- PM-VBRY: இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசு! எப்படி பெறுவது?
PM-VBRY: இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசு! எப்படி பெறுவது?
மத்திய அரசு PM-VBRY என்ற திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்குகிறது. இதை எப்படி பெறுவது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை
இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வேலையின்மை பிரச்சனையும் தலைவிரித்தாடுகிறது. நமது நாட்டில் இளைஞர்களுக்கு படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. இவ்வளவு ஏன் படித்த இளைஞர்கள் எந்த வேலை செய்ய தயாராக இருந்தாலும் வேலை கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசின் திட்டம்
அந்த வகையில் இந்தியாவில் முறைசார்ந்த வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கவும், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒரு புதிய அதிரடித் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. 'பிரதம மந்திரியின் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா' (PM-VBRY) என்ற பெயரிலான இத்திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டம் வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம்' (ELI Scheme) என்றும் அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
PM-VBRY திட்டத்தின் காலம் மற்றும் தகுதிகள்
இந்தத் திட்டம் 1 ஆகஸ்ட் 2025 முதல் 31 ஜூலை 2027 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். முதல் முறையாக வேலைக்குச் சேரும் இளைஞர்கள், தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், அவர்களின் மாதாந்திர மொத்தச் சம்பளம் ரூ.1,00,000-க்குள் இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
ஊக்கத்தொகை எவ்வாறு வழங்கப்படும்?
தகுதியுள்ள ஊழியர்களுக்கு அவர்களின் ஒரு மாதச் சம்பளத்திற்கு இணையான தொகை (அதிகபட்சமாக ₹15,000 வரை) இரண்டு தவணைகளாக நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் (DBT மூலம்) செலுத்தப்படும்.
முதல் தவணை: புதிய பணியாளர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 6 மாதங்கள் பணியை நிறைவு செய்த பிறகு முதல் தவணைத் தொகை வழங்கப்படும்.
இரண்டாம் தவணை: பணியில் சேர்ந்து 12 மாதங்கள் நிறைவடைந்த பிறகு, ஊழியர்கள் EPFO அமைப்பால் நடத்தப்படும் 'நிதிசார் கல்வி வகுப்பு' (Financial Literacy Course) என்ற குறுகிய காலப் படிப்பை முடிக்க வேண்டும். இதை முடித்தவுடன் இரண்டாம் தவணைத் தொகை எதிர்காலச் சேமிப்பாக அவர்களின் கணக்கில் செலுத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த ஊக்கத்தொகையைப் பெற ஊழியர்கள் தங்களுடைய யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) பெற்றிருக்க வேண்டும். மேலும், UMANG செயலி மூலம் முக அங்கீகாரம் (Face Authentication) செய்து, தங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு மற்றும் PF கணக்கு ஆகியவற்றைச் சரியாக இணைத்திருக்க வேண்டும்.
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அவர்களைச் சேமிப்புப் பழக்கத்தை நோக்கி ஊக்குவிக்கவும் இந்த மெகா திட்டம் பெரும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

