2026-ல் ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படுமா? அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
சமூக ஊடகங்களில் 2026 மார்ச்சில் ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படும் என்ற செய்தி வெளியாகி வருகிறது. இந்த செய்தி பொதுமக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ரூ.500 நோட்டு செய்தி
சமூக ஊடகங்களில் சமீப காலமாக “2026 மார்ச் மாதத்திற்குள் ரூ.500 நோட்டுகள் ஏடிஎம்களில் இருந்து நிறுத்தப்படும்” என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்த செய்தி பொதுமக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில், இதற்கு மத்திய அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது.
பிஐபி விளக்கம்
மத்திய அரசின் ஊடக பிரிவான பிஐபி (PIB) தனது Fact Check மூலம் இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சார்பில் ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என பிஐபி தெளிவுபடுத்தியுள்ளது. “2026 மார்ச்சில் ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படும்” என்ற தகவல் முற்றிலும் போலியானது என அது கூறியுள்ளது.
ரூ.500 டீமோனிடைசேஷன்
மேலும், ரூ.500 மதிப்பிலான நோட்டுகள் இன்றும் சட்டபூர்வமான நாணயமாக செல்லுபடியாகும் என்றும், அனைத்து விதமான பணப் பரிவர்த்தனைகளிலும் எந்த தடையும் இன்றி பயன்படுத்தலாம் என்றும் பிஐபி விளக்கம் அளித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லாமல் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ரூ.500 நோட்டுகள்
இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல முறை ரூ.500 நோட்டுகள் தடை செய்யப்படும், மீண்டும் டீமோனிடைசேஷன் நடக்கும் போன்ற செய்திகள் பரவியுள்ளன. கடந்த ஜூன் மாதத்திலும் இதே போன்ற தகவல்களை பிஐபி மறுத்திருந்தது. யூடியூப் வீடியோ ஒன்றில் ஒரு செய்தி வாசகர் இந்த வதந்தியை பரப்பியது, அரசு அதை உடனடியாக மறுத்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

