ஏடிஎம் கட்டணங்கள் மாற்றம்: மே 1 முதல் புதிய விதிகள்!
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மே 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களுக்கான திருத்தப்பட்ட கட்டமைப்பை வெளியிட்டுள்ளது. இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் கூடுதல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ நகரங்களில் மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகளும், பிற நகரங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படும்.

RBI
நாடு முழுவதும் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களுக்கான திருத்தப்பட்ட கட்டமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. புதிய கட்டணங்கள் மே 1, 2025 முதல் அமலுக்கு வரும். இலவச பரிவர்த்தனை வரம்புகள், அந்த வரம்புகளை மீறும்போது வசூலிக்கப்படும் கட்டணங்கள், பரிவர்த்தனைக் கட்டணங்கள் ஆகியவை மாற்றியமைக்கப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் ஏடிஎம் நெட்வொர்க்குகளின் செயல்பாட்டில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. இது, வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்காக ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்றாகவும் அமைகிறது.
ATM Transaction Fee
இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்புகளை மீறுவதற்கான கட்டணங்களில் மாற்றம் செய்வது குறித்து HDFC வங்கி, PNB, கோடக் மஹிந்திரா போன்ற வங்கிகள் ஏற்கனவே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன.
வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் பெறக்கூடிய இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. சொந்த வங்கி ஏடிஎம்களுக்கும் பிற வங்கிகளால் இயக்கப்படும் ஏடிஎம்களுக்கும் வெவ்வேறு எண்ணிக்கையில் இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும்.
ATM Free Transactions
மெட்ரோ நகரங்களில், வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகளைப் பெறலாம். பிற நகரங்களில் மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகள் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்புகள் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் இரண்டிற்கும் பொருந்தும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்புகளை மீறினால், வங்கிகள் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.23 வசூலிக்க அனுமதிக்கப்படுகின்றன. இதுவும் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் இரண்டிற்கும் பொருந்தும். சில பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் வரிகளும் தனியே வசூலிக்கப்படும்.
ATM interchange fees
HDFC வங்கியின் வலைத்தளத்தின்படி, மே 1, 2025 முதல், இலவச வரம்பைத் தாண்டிய ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ. 21 + வரிகள் என்பதில் இருந்து ரூ. 23 + வரிகள் ஆக உயர்கிறது. இண்டஸ்இண்ட் வங்கி வலைத்தளத்தின்படி, “மே 1, 2025 முதல், இண்டஸ்இண்ட் வங்கி அல்லாத பிற ஏடிஎம்களில் இலவச வரம்புகளுக்கு அப்பால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் வசூலிக்கப்படும்.”
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.