வீடு வாங்க போறீங்களா? குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகள் இதோ!
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்ததால், வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டியைத் திருத்தியுள்ளன. இந்த வட்டி குறைப்பால் EMI சுமை குறைந்து, வீடு வாங்க இதுவே சரியான நேரம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

வீட்டுக் கடன் வட்டி
நாட்டில் வங்கிக் கடன்களின் வட்டி மாற்றத்தை தீர்மானிக்கும் முக்கியமான அளவுகோல் ரெப்போ விகிதம் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி இந்த ரெப்போ விகிதத்தை 5.50% இலிருந்து 5.25% ஆகக் குறைத்துள்ளது. இந்த 0.25% குறைப்பு, பொதுமக்கள் கடன்களுக்கான வட்டியில் சராசரியாக நிவாரணத்தை உருவாக்கும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். ரெப்போ விகிதம் குறையும்போது வங்கிகளின் கடன் பெறும் செலவு குறையும்; அந்த வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவற்றில் வட்டி குறைய வாய்ப்புள்ளது. அதனால், வீடு வாங்க விரும்புபவர்கள் அல்லது புதிய கடன் பெற திட்டமிடுபவர்களுக்கு இது சிறந்த சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.
குறைந்த வட்டியில் கடன்
இந்த அறிவிப்பு வந்த உடனேயே பல வங்கிகள் தங்களது கடன் வட்டிகளைத் திருத்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக வீட்டுக் கடன்களில் இதன் தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது. உதாரணமாக, பேங்க் ஆஃப் பரோடா சுமார் 7.40% வட்டியில் கடன் வழங்குகிறது; பேங்க் ஆஃப் இந்தியாவின் வட்டி சுமார் 7.30% இலிருந்து தொடங்குகிறது. யூனியன் பேங்கில் வட்டி சுமார் 7.45% மற்றும் கரூர் வைஸ்யா வங்கியில் 7.60% வரை கிடைக்கிறது. வட்டி வரம்புகள் குறைந்துள்ளதால், நீண்ட கால EMI கடன்கள் பெறுபவர்களுக்கு சேமிப்பு அதிகம் ஏற்படும். ஏற்கனவே கடன் பெற்றவர்களும் ரீசெட் தேதியின் போது குறைந்த வட்டி நன்மையைப் பெற வாய்ப்புள்ளது. உயர்ந்த கடன் தொகை வைத்திருப்பவர்களுக்கு வட்டி குறைப்பு கனிசமான பயனளிக்கும் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வீடு வாங்க கடன்
தற்போதைய சூழ்நிலையில் வீட்டுக் கடன்களுக்கான தேவை பெருகும் வாய்ப்பு அதிகம் என நிதி நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். வட்டி குறைப்பால் EMI சுமை குறைவது, குடும்ப செலவுகளை சீராக திட்டமிட உதவுகிறது. குறைந்த வட்டி விகிதம் காரணமாக வீட்டின் மொத்த செலவு குறைய வாய்ப்புள்ளதால், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய இது சரியான நேரம் என கருதப்படுகிறது. வருங்காலத்தில் தேவை அதிகரித்தால் சொத்து விலை உயரக்கூடும் என்பதால், வட்டி நன்மையை பயன்படுத்தி வீட்டை வாங்குவது பயனுள்ளதாக இருக்கும் நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

