மார்ச் 2க்குள் பண்ணலனா அவ்ளோதான்.. 30% தள்ளுபடி வேற இருக்கு.. LIC சூப்பர் ஆஃபர்
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), பிரீமியம் செலுத்தத் தவறியதால் லேப்ஸ் ஆன பாலிசிகளை மீண்டும் செயல்படுத்த ஒரு சிறப்பு புத்துயிர் பிரச்சாரத்தை அறிவித்துள்ளது.

எல்ஐசி பாலிசி
பிரீமியம் கட்டணம் செலுத்த தவறியதால் உங்கள் எல்ஐசி ஆயுள் காப்பீட்டு பாலிசி லேப்ஸ் ஆக இருந்தால், அதை மீண்டும் செயல்படுத்த ஒரு நல்ல வாய்ப்பை எல்ஐசி தற்போது வழங்கியுள்ளது. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) சார்பில், லேப்ஸ் பாலிசிகளை மீட்டெடுக்க உதவும் சிறப்பு புத்துயிர் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த குறுகிய கால சலுகை மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், பாலிசி வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த சிறப்பு மீட்டெடுக்கும் இயக்கம் ஜனவரி 1 முதல் மார்ச் 2 வரை நடைபெறுகிறது.
நேரத்திற்கு பிரீமியம் செலுத்த முடியாமல் பாலிசி நிறுத்தப்பட்டது தனிப்பட்ட ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை மீண்டும் செயல்பாட்டில் கொண்டுவருவதே இதன் நோக்கமாகும். கடந்த சில ஆண்டுகளில் வருமானம் சீராக இல்லாத சூழல் பல குடும்பங்களுக்கு நீண்டகால நிதித் திட்டமிடலில் சவால்களை ஏற்படுத்தியதால், இந்த முயற்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த பிரச்சாரத்தின் முக்கிய பலன், தாமத கட்டணத்தில் வழங்கப்படும் சிறப்பு தள்ளுபடி ஆகும். ரிவைவல் செய்ய தகுதியான தனிப்பட்ட பாலிசிகளுக்கு, தாமத கட்டணத்தில் அதிகபட்சம் 30% வரை தள்ளுபடி கிடைக்கும்.
மார்ச் 2 வரை
ஆனால் இதற்கு ரூ.5,000 வரை மட்டுமே உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு தாமத கட்டணம் முழுமையாக விலக்கப்படும் என்றும் எல்ஐசி தெரிவித்துள்ளது. இந்த வசதி பிரீமியம் கட்டும் காலக்கட்டத்தில் லேப்ஸ் ஆன பாலிசிகளுக்கும், முழு பாலிசி காலம் இன்னும் முடிவடையாத திட்டங்களுக்கும் மட்டுமே பொருந்தும். மேலும் சில பாலிசிகளில் மருத்துவச் சோதனை அல்லது உடல்நல நிபந்தனைகள் இருக்கும் போது, எந்த சலுகையும் வழங்கப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வேலை இழப்பு, மருத்துவ செலவுகள், தற்காலிக நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் பிரீமியம் செலுத்த முடியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும். லாப்ஸ் ஆன பாலிசியை மீட்டெடுத்தால், காப்பீட்டு பாதுகாப்பு (Life Cover) மீண்டும் முழுமையாக கிடைக்கும் என்பதே முக்கிய நன்மை. பல ஆண்டுகள் பிரீமியம் கட்டியிருந்தாலும் பாலிசி நிறுத்தப்பட்டால் கவர் நிற்க வாய்ப்பு உள்ளது. அதனால் புதிய பாலிசியை வாங்குவதற்கு பதிலாக பழைய பாலிசியை மீட்டெடுப்பதே பலருக்கு குறைவான செலவாகும். இருப்பினும், பாலிசி தகுதி உள்ளதா, இனி தொடர்ந்து பிரீமியம் கட்ட முடியுமா என்பதை உறுதி செய்து முடிவு எடுப்பதே சிறந்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

