- Home
- Business
- ஏசி, ஃபிரிட்ஜ், சம்பளம் முதல் வருமான வரி வரை.. இன்று முதல் அமல்.. முக்கிய மாற்றங்கள் என்னென்ன?
ஏசி, ஃபிரிட்ஜ், சம்பளம் முதல் வருமான வரி வரை.. இன்று முதல் அமல்.. முக்கிய மாற்றங்கள் என்னென்ன?
ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. கார்கள், ஃபிரிட்ஜ், ஏசி ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான வாய்ப்பு என பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஜனவரி 1 விதிமுறை மாற்றங்கள்
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே, இன்று முதல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. விவசாயிகள் முதல் சம்பளதாரர்கள், டிஜிட்டல் கட்டண பயனாளர்கள் முதல் வாகனம் வாங்குபவர்கள் வரை பல தரப்பினருக்கும் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம் கிசான் மாற்றம்
விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தில் புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் இந்த திட்டத்தின் கீழ் பண உதவி பெற, பிரத்யேக ‘கிசான் ஐடி’ வைத்திருப்பது கட்டாயம். நில ஆவணங்கள், பயிர் விவரங்கள், ஆதார் மற்றும் வங்கி கணக்கு தகவல்கள் இந்த ஐடியுடன் இணைக்கப்படும். திட்டத்தின் தவறான பயன்பாட்டை தடுக்கவும், தகுதியான விவசாயிகளுக்கே பலன் சென்று சேரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐடிஆர் தாக்கல் மாற்றம்
வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு நிம்மதியான மாற்றமாக, 2026 முதல் ஐடிஆர் தாக்கல் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. சம்பளம், வங்கி வட்டி, உள்ளிட்ட முதலீடு விவரங்கள் தானாக முன்பே நிரப்பப்பட்டிருக்கும். அதே நேரத்தில், ஃபிரிட்ஜ் விலை 5% மற்றும் ஏர் கண்டிஷனர் விலை 10% வரை உயர்கிறது. புதிய மின்சார திறன் ஸ்டார் ரேட்டிங் விதிமுறைகளே இதற்குக் காரணம்.
8வது ஊதியக் குழு
இதேபோல், மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு பரிந்துரைகள் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உயர வாய்ப்பு உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், UPI முறையில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த மொபைல் சிம் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதே விதி வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தகவல் தொடர்பு செயலிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இனிமேல் கிரெடிட் பீரோக்கள் வாரந்தோறும் கிரெடிட் ஸ்கோரை புதுப்பிப்பதால், கடன் திருப்பிச் செலுத்தும் பதிவுகள் விரைவாக ஸ்கோரில் பிரதிபலிக்கும்.
கார் விலை உயர்வு
வாகன சந்தையிலும் புத்தாண்டு விலை மாற்றம் காணப்படுகிறது. ஹூண்டாய் தனது அனைத்து மாடல்களுக்கும் 0.6% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. மேலும், உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக Volkswagen மாடல்களைப் பொறுத்து 2.9% முதல் 6.5% வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு 2026 தொடக்கம் பல மாற்றங்களுடன் மக்களின் செலவுகளையும் திட்டங்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

