ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் பண்ணுறீங்களா? இந்த மாற்றத்தை தெரிஞ்சுக்கோங்க
முன்பதிவு தொடங்கும் முதல் நாளில், இந்த சரிபார்ப்பு நேரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, ஜனவரி 2026 முதல் நாள் முழுவதும் அமல்படுத்தப்படும். இந்த புதிய விதிமுறை, பண்டிகை காலங்களில் உண்மையான பயணிகள் எளிதாக டிக்கெட் பெற உதவும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு
ஹோலி, தீபாவளி, சதுர்த்தி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. காலை 8 மணி ஆகும் நொடியில் ஆன்லைன் முன்பதிவு திறக்கப்பட்டாலும், சில நிமிடங்களில் அனைத்து சீட்களும் நிரம்பி விடுகின்றன. உண்மையான பயணிகள் பலரும் வெயிட் லிஸ்டில் சிக்கி தவிப்பது வழக்கம். இந்த நிலைக்கு முக்கிய காரணமாக, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புரோக்கர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்திய ரயில்வே
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்திய ரயில்வே மீண்டும் ஒரு கடுமையான முடிவை எடுத்துள்ளது. புரோக்கர்கள் மென்பொருள் மூலம் டிக்கெட்டுகளை மொத்தமாக புக் செய்வதை தடுக்கும் நோக்கில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அடிப்படையில் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்பதிவு காலத்தின் (அட்வான்ஸ் ரிசர்வேஷன் காலம் – ARP) முதல் நாளில் இந்த விதி அமல்படுத்தப்பட்டது.
ஆதார் சரிபார்ப்பு
முன்னதாக, இந்த ஆதார் சரிபார்ப்பு காலை 8 மணி முதல் 15 நிமிடங்கள் மட்டுமே கட்டாயமாக இருந்தது. பின்னர் அது 2 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது. தற்போது, இந்த நேரத்தை மேலும் அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம், முன்பதிவு தொடங்கும் முக்கிய நேரங்களில் புரோக்கர்கள் இடையூறு செய்ய முடியாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
ஆன்லைன் டிக்கெட் புக்
புதிய விதிமுறைகளின்படி, இந்த மாதம் 29ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் மத்தியம் 12 மணி வரை ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகும். ஜனவரி 5, 2026 முதல் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். மேலும், ஜனவரி 12, 2026 முதல், முன்பதிவு தொடங்கும் நாள் முழுவதும், அதாவது காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.
பண்டிகை கால டிக்கெட்
இதுகுறித்து, 2025 டிசம்பர் 18ஆம் தேதி ரயில்வே போர்டு அனைத்து மண்டலங்களின் முதன்மை வர்த்தக மேலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இந்த மாற்றங்கள் கட்டகதியாக செயல்படுத்தப்படும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரயில் நிலையங்களில் உள்ள கணினி PRS கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அந்த சேவை வழக்கம்போல் தொடரும் என்றும் ரயில்வே அதிகாரிகள் அறிவிக்கின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

