ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் எடுக்க போறீங்களா? இனி இது இல்லாமல் முடியாது
Indian Railways : ரயில்வே டிக்கெட் முன்பதிவில் மோசடியை தடுக்க புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம் உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய ரயில்வே அறிவிப்பு
தற்போது, ரயில்களில் இருக்கை உறுதி செய்வது பெரும் சிரமமாக உள்ளது. டிக்கெட் மோசடி காரணமாக, உண்மையில் பயணம் செய்ய விரும்புவோர் டிக்கெட் பெற முடியாமல் தவிக்கிறார்கள். இதை தடுக்கும் வகையில், ரயில்வே தற்போது பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது. இனி சாதாரண ரிசர்வேஷன் டிக்கெட்டுகளுக்கும், தட்கல் போன்று ஆதார் அங்கீகாரம் கட்டாயம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு
ரயில்வே துறை, டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றங்களை கூறியுள்ளது. அக்டோபர் 1 முதல், தட்கல் டிக்கெட்டுக்கு இருந்த ஆதார் சரிபார்ப்பு விதி, சாதாரண முன்பதிவு டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக்கிங் முறையில் ஏற்படும் மோசடிகளை தடுப்பதே இதன் நோக்கம் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தட்கல் முன்பதிவு நடைமுறை
அக்டோபர் 1 முதல், முன்பதிவு திறக்கும் முதல் 15 நிமிடங்களில், ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே டிக்கெட் புக்கிங் செய்ய அனுமதி வழங்கப்படும். இந்த விதி IRCTC இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பில் மட்டும் பொருந்தும். இதுவரை இது தட்கல் டிக்கெட்டுகளுக்கே இருந்தது. இப்போது அதை விரிவாக்கம் செய்கிறார்கள். இதன் மூலம் டிக்கெட் உண்மையான பயணிகளுக்கு கிடைப்பதோடு, அங்கீகரிக்கப்படாத ஏஜென்ட்கள் மூலம் நடக்கும் தவறுகள் குறைக்கப்படும்.
ரயில்வே தட்கல் விதி
மேலும், தற்போதைய விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் ஏஜென்ட்களுக்கு முதல் 10 நிமிடங்களில் டிக்கெட் புக்கிங் செய்ய தடைவிதிப்பு தொடரும். ஆனால், ரயில் நிலையங்களில் உள்ள PRS கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு நேரம் மற்றும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
தட்கல் டிக்கெட் முன்பதிவு
இந்த புதிய முறையை செயல்படுத்த, ரெயில்வே தகவல் மையத்துக்கும் (CRIS) ஐஆர்சிடிசிக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் பிறப்பித்து, விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஆன்லைன் டிக்கெட் சூழலை வலுப்படுத்தி, மோசடிகளை குறைக்கும் என ரயில்வே நம்புகிறது.