கப்பல் போக்குவரத்துக்கு கார்பன் வரி விதிக்க இந்தியா ஆதரவு
ஐ.நா. கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் கார்பன் வரிக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. 63 நாடுகள் ஆதரவு, எண்ணெய் நாடுகள் எதிர்ப்பு. 2030க்குள் கார்பன் வெளியேற்றம் குறையும் என எதிர்பார்ப்பு.

Global carbon tax on shipping
கப்பல் போக்குவரத்துத் துறை
ஐக்கிய நாடுகள் சபையின் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தால் கப்பல் போக்குவரத்துத் துறையின் மீது விதிக்கப்பட்ட உலகின் முதல் உலகளாவிய கார்பன் வரிக்கு (Global carbon tax) ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. மேலும் 62 நாடுகளும் கார்பன் வரியை ஆதரித்து வாக்களித்துள்ளன.
ஒரு வார தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) லண்டனில் உள்ள சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) தலைமையகத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது கப்பல்களில் இருந்து பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் (Greenhouse gas emissions) குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கார்பன் மாசு இல்லாத வகையில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.
What is Global carbon tax?
உலகளாவிய கார்பன் வரி (Global carbon tax) என்றால் என்ன?
முதல் முறையாக ஒரு முழுத் தொழில்துறையின் மீதும் உலகளாவிய கார்பன் வரி விதிக்கப்பட்டுள்ளது. 2028 முதல், கப்பல்கள் குறைந்த அளவு கார்பனை உமிழும் எரிபொருட்களுக்கு மாற வேண்டும் அல்லது அவை உருவாக்கும் மாசுபாட்டிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த வரி 2030ஆம் ஆண்டுக்குள் 40 பில்லியன் டாலர்கள் வரை வருவாய் ஈட்டக்கூடும். இந்த ஒப்பந்தம் சர்வதேச காலநிலை மாற்றக் கொள்கையில் (international climate policy) ஒரு திருப்புமுனையாகக் கருதப்பட்டாலும், வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்துக்கான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை என விமர்சனங்களும் எழுந்துள்ளன.
International Maritime Organisation (IMO)
கார்பன் நீக்கம்:
கார்பன் வரியிலிருந்து திரட்டப்படும் அனைத்து வருவாயும் கடல்சார் துறையில் கார்பன் நீக்கம் செய்வதற்கான முயற்சிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படும். மேலும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நாடுகள் மாறுவதற்கு அல்லது அதன் தாக்கங்களிலிருந்து மீள்வதற்கு உதவு செய்வதற்கும் இந்த நிதி ஒதுக்கப்படாது.
ஆனால், கார்பன் உமிழ்வை குறைந்தபட்சம் 20% கட்டுப்படுத்த வேண்டும் என சர்வதேச கடல்சார் அமைப்பு இலக்கை வைத்திருக்கிறது. இதற்கு மாறாக கார்பன் வரி விதிப்பு மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் கப்பல் போக்குவரத்தில் கார்பன் உமிழ்வை 10% மட்டுமே குறைக்க முடியும் எனக் கணிப்புகள் கூறுகின்றன.
International Maritime Organisation (IMO)
எண்ணெய் வள நாடுகள் எதிர்ப்பு
இந்த ஒப்பந்தத்தை இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட 63 நாடுகள் ஆதரிக்கின்றன. ஆனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, வெனிசுலா போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகள் எதிர்க்கின்றன. அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகயில் பங்கேற்கவே இல்லை. வாக்கெடுப்பிலும் கலந்துகொள்ளவில்லை.
பசிபிக், கரீபியன், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நாடுகள், கார்பன் வரி வருவாயில் ஒரு பங்கை பரந்த காலநிலை மாற்றம் சார்ந்த செலவுகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இந்த நாடுகள், இறுதி முடிவில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தின.