ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்.. சம்பளதாரர்கள் இப்பவே கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவைதான்
2026 ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதிய நிதி பங்களிப்பு, மற்றும் வீட்டு வசதி போன்ற சலுகைகளை பாதிக்கும்.

ஏப்ரல் 1 முதல் வருமான வரி மாற்றம்
2026 ஏப்ரல் 1 முதல் வருமானவரி விதிகளில் முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இது சாதாரண திருத்தம் அல்ல. பணியாளர்களின் சம்பளம் முதல் வருமானவரி சான்றிதழ் வரை பல அம்சங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இப்போது தங்கள் நிதித் திட்டங்களை சரிசெய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
புதிய வருமானவரி விதிகள் 2026
புதிய வருமானவரி விதிகள் 2026, இதுவரை நடைமுறையில் இருந்த 1961 சட்டத்திற்கு மாற்றாக அமல்படுத்தப்பட்டது. இவை 2026–27 நிதியாண்டிற்கு பொருந்தும். வருமானக் கணக்கீடுகள், சலுகைகள் மற்றும் கூடுதல் பலன்களின் மதிப்பீடு போன்றவற்றில் தெளிவான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன, வரி கணக்கீடுகள் மேலும் ஒழுங்குபடுத்தப்படும்.
ஓய்வூதிய நிதி பங்களிப்பு
பணியாளர்களுக்காக நிறுவனங்கள் செலுத்தும் ஓய்வூதிய நிதி பங்களிப்பு, ஆண்டுக்கு ரூ.7.5 லட்சத்தை கடந்தால், அதற்கு மேற்பட்ட தொகை வரிக்குட்படும். மேலும், அந்த கூடுதல் தொகையில் கிடைக்கும் வருமானமும் வரியில் சேர்க்கப்படும். இது அதிக வருமானம் பெறும் பணியாளர்களுக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வீட்டு வசதியின் மதிப்பீடு
நிறுவனம் வழங்கும் வீட்டு வசதியின் மதிப்பீடு இப்போது நகர மக்கள் தொகையை நிர்ணயிக்கும். பெரிய நகரங்களில் சம்பளத்தின் 10 சதவீதம் வரி மதிப்பாக கருதப்படும். வாடகை பணியாளர் செலுத்தினால், அது கழிக்கப்பட்டு கணக்கிடப்படும். இதனால் பெருநகரங்களில் பணிபுரிபவர்களுக்கு வரிச்சுமை மாற்றமடைய வாய்ப்பு உள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட வரி மதிப்பு
நிறுவனம் வழங்கும் வாகன வசதிக்கும் மாதாந்திர நிர்ணயிக்கப்பட்ட வரி மதிப்பு அமையும். 1.6 லிட்டர் திறன் வரை உள்ள வாகனங்களுக்கு ரூ.5,000, அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ரூ.7,000 என கணக்கிடப்படும். ஓட்டுநர் வழங்கப்பட்டால் கூடுதலாக ரூ.3,000 சேர்க்கப்படும். இவை அனைத்தும் சம்பளச் சலுகைகளின் ஒரு பகுதியாக கருதப்படும்.
வரிவிலக்கு
மேலும், நிறுவனங்கள் வழங்கும் பரிசுகள் ஆண்டிற்கு ரூ.15,000 வரை வரிவிலக்கு பெறும். அதற்கு மேல் வழங்கப்படும் பரிசுகள் முழுமையாக வரிக்குட்படும். அலுவலக நேரங்களில் வழங்கப்படும் உணவு, ஒரு முறை ரூ.200க்குள் இருந்தால் வரிவிலக்கு வழங்கப்படும். அதற்கு மேல் செலவானால் வரியில் சேர்க்கப்படும்.
முதலீட்டு திட்டங்கள்
மொத்தத்தில், இந்த புதிய விதிகள் வருமானம், சலுகைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான அணுகுமுறையையே மாற்றுகின்றன. எனவே, சம்பளதாரர்கள் தங்களின் வருமான அமைப்பு, சலுகைகள் மற்றும் முதலீட்டு திட்டங்களை மறுபரிசீலனை செய்து, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது அவசியமாகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

