கடன் வலையில் சிக்கிக்கொண்டீர்களா? தப்பிக்க வழிகள் இதோ!
கடன் வாங்குவது தவிர்க்க முடியாதது என்றாலும், அதிக வட்டி மற்றும் தேவையற்ற கடன்களைத் தவிர்ப்பது அவசியம். கடன்களை முறையாகக் கையாண்டு, நிதி நெருக்கடியில் இருந்து விடுபட வழிகள் உள்ளன.
கடன் வாங்குவோர் விகிதம் அதிகரிப்பு
கிரெடிட் கார்டுகள் வந்த பிறகு கடன் இல்லாத நபர்களே இருக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியக் குடும்பங்களின் கடன் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 11 சதவீதத்திற்கு மேல் உள்ளதாகவும் இதே காலத்தில் அமெரிக்காவில் குடும்பங்களின் கடன் அளவு ஆண்டுக்கு சராசரியாக 7 சதவீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திடீர் பிரச்சினை சிக்கலை கொடுக்கும்
தொடர்ந்து வருமானம் வந்துகொண்டே இருப்பவர்களுக்குக் கடன்களால் பெரிதாகப் பிரச்சினை இருப்பதில்லை. மாறாக, ஏதேனும் எதிர்பாராத சூழலில் வேலை போய்விட்டாலோ, விபத்து நேர்ந்துவிட்டாலோ, கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் தொழில் முடங்கிவிட்டாலோ கடன் வாங்கியவர்கள் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் சிரமப்படும் சூழல் ஏற்படும்.
அடிப்படை புரிதல் வேண்டும்
அட்வான்ஸாகத் திட்டமிட்டு கடன்களில் இருந்து தப்பிப்பது ஒருபக்கம் இருந்தாலும், சில நேரங்களில் கடன் வாங்குவதும் பலருக்குத் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அப்படியான சூழலில் சில அடிப்படை விஷங்களை தெரிந்துகொண்டாலே அதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
ஆலோசனை அவசியம்
கடன் வாங்கும்போதே அது அத்தியாவசியமானதா, தேவை தானா என்பதைப் பார்க்க வேண்டும். நம்முடைய பொருளாதார நிதிநிலை என்ன, கடனில் தேவையில்லாத ஒரு பொருளை வாங்குவதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் என்னென்ன என்பதையெல்லாம் குடும்பத்தினர்களை ஆலோசித்து கடன் வாங்க வேண்டும்
அதிக வட்டியில் கடன் வாங்க வேண்டாம்
அவசியம் கடன் வாங்கவேண்டிய சூழல் வந்தால், முடிந்த வரையில் வங்கிகளில் வாங்க முயற்சி செய்ய வேண்டும். எளிதில் கிடைக்கிறதே, எந்த ஆவணங்களும் கேட்காமல் கொடுக்கிறார்களே என்று அதிக வட்டியில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
எதிர்கால வருவாய் கடனுக்கு உதவாது
எதிர்காலத்தில் வரக்கூடிய வருவாயை வைத்து கடன்களைத் திட்டமிடுவது சரியாக இருக்காது.அடுத்த வருடம் ரூ.30,000 ஊதிய உயர்வு வரும், அதனால் தாராளமாகக் கடன் வாங்கலாம் என்று நினைத்தால் அதில் சிரமத்தில் முடியும்.
விரலுக்கேற்ற வீக்கம் தேவை
விரலுக்கேற்ற வீக்கம் தேவை. கடன் வாங்கும்போது உங்களுடைய வரம்புக்குள் வாங்க வேண்டும். உங்களுடைய பட்ஜெட்டுக்கு 10 லட்சம் மதிப்புள்ள காரைதான் வாங்க முடியும் எனும்பட்சத்தில், 70 லட்சத்துக்கு பெரிய வீடு வாங்குவது சிக்கலை உருவாக்கும்.
கடன்களை எல்லாம் பட்டியல் இடுங்கள்
கடன் பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்ககு முதலில் கடன்களை எல்லாம் பட்டியல் இடுங்கள். அதில் அதிக வட்டி உள்ள கடன் களை முதலில் அடைப்பதற்கான வழிகளைப் பார்க்க வேண்டும். கடன்களின் எண்ணிக் கையை முதலில் குறைக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய வருமானத்திலிருந்து கடனுக் காகப் போகும் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம்.
அதிக வட்டி உள்ள கடன்களை தவிற்கலாம்
கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் போன்ற அதிக வட்டி உள்ள கடன்களை, கையில் தங்க நகை இருந்தாலோ, இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தாலோ அவற்றை வைத்துக் கடன் வாங்கி அடைக்கலாம். இவற்றில் 9% வட்டிக்குக் கடன் கிடைக்கும். கிரெடிட் கார்டு போன்றவற்றில் 40 சதவிகிதத்துக்கும் மேல் வட்டி என்பதை மனதில்கொள்ள வேண்டும்.
ரோல் ஓவர் வேண்டாம்
பெரும்பாலானோர் சிக்கிக்கொண்டு இருப்பது கிரெடிட் கார்டு கடனில்தான். கிரெடிட் கார்டில் குறைந்தபட்ச தொகையைச் செலுத்துவதற்குப் பதிலாக, உங்களுடைய தொகையை இ.எம்.ஐ-ஆக மாற்றிவிடுங்கள். ஒருபோதும் கிரெடிட் கார்டில் ரோல் ஓவர் செய்யாதீர்கள்.
உறவினர்கள் நண்பர்களின் உதவி கைகொடுக்கும்
உங்களுடைய கடன் நெருக்கடியை உறவினர்கள் நண்பர்களிடம் எடுத்துச் சொல்லி உதவி கேளுங்கள். உண்மை யில் உங்கள் மீது அக்கறை உள்ளவர்களும் இருப்பார்கள். அவர்களால் உதவ முடியும் பட்சத்தில், அவர்களிடமிருந்து பணமோ, நகையோ வாங்கி அதை வைத்து கடனை அடைக்கலாம்.
டாப் அப் லோன் கைகொடுக்கும்
சொத்து ஏதும் இருந்தால் அதை அடகு வைத்து, அல்லது ஏற்கெனவே உள்ள வீட்டுக் கடனில் டாப் அப் லோன் எடுத்து, உங்களுடைய மற்ற கடன்களை எல்லாம் அடைக்கலாம். உங்களுக்குக் குறைவான வட்டியில் வேறொரு வங்கிக் கடன் கொடுக்கத் தயாராக இருந்தால் உங்கள் வீட்டுக் கடனை அந்த வங்கிக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
திட்டமிடலை உடனே தொடங்குங்கள்
வீட்டுக் கடன், கல்விக்கடன், பிசினஸ் கடன் போன்ற பயனுள்ள கடன்களைத் தவிர்த்து வேறு கடன்கள் எதையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதுதான் கடன் வலையில் சிக்காமல் இருக்க ஒரே வழி. அதற்கான திட்டமிடலை உடனே தொடங்குங்கள்
கடன் இல்லாத வாழ்வுதானே அனைவருக்கும் நிம்மதி
சேமிப்பு, முதலீடு செய்வதைவிட முக்கியமானது, வாங்கிய கடனை முதலில் அடைப்பதுதான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். அதிலும் அதிக வட்டியுள்ள கடன்களை உடனடியாக அடைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். கடன் இல்லாத வாழ்வுதானே அனைவருக்கும் நிம்மதி