8வது ஊதியக்குழு வரும்முன்னே சம்பள உயர்வு! யாருக்கு லாபம் தெரியுமா?
8வது ஊதியக்குழு வருவதற்கு முன்பே, அரசு சில பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் பென்ஷன் உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது அவர்களின் மாத வருமானத்தை கணிசமாக மேம்படுத்தும்.

8வது ஊதியக்குழு முன் சம்பள உயர்வு
8வது ஊதியக்குழு வருவதற்கு முன்பே, சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் பென்ஷன் உயர்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு PSGIC (பொது துறை பொது காப்பீட்டு நிறுவனங்கள்), NABARD, RBI போன்ற அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பொருந்தும். இதன் மூலம் சுமார் 46,322 ஊழியர்கள், 23,570 ஓய்வூதியதாரர்கள், 23,260 குடும்ப ஓய்வூதியதாரர்கள் என பலர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் உயர்வு
நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த உயர்வு முடிவின் நோக்கம் நிதித் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் மனோபலத்தை உயர்த்துவது மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சமூக பாதுகாப்பை வலுப்படுத்துவது என்பதாகும். குறிப்பாக ஓய்வுபெற்றவர்களின் மாத வருமானம் மேம்படும் வகையில் இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பள திருத்தம்
RBI-யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் மற்றும் குடும்ப பென்ஷனில் மாற்றம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது 2022 நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் வகையில், அடிப்படை பென்ஷன் + டிஏ மீது 10% உயர்வு வழங்கப்படும். இதன் மூலம் பல ஓய்வுபெற்றவர்களின் அடிப்படை பென்ஷன் சுமார் 1.43 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மொத்தம் 30,769 பேர் (22,580 ஓய்வூதியதாரர்கள் + 8,189 குடும்ப ஓய்வூதியதாரர்கள்) பயன் பெறுவார்கள்.
ஊழியர்கள் சம்பள உயர்வு
மேலும், PSGIC நிறுவன ஊழியர்களுக்கு சம்பள திருத்தம் ஒப்புதல் பெற்றுள்ளது. இது 2022 ஆகஸ்ட் 1 முதல் அமலில் வரும் என்றும், மொத்த சம்பளச் செலவில் 12.41% உயர்வு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ சேர்த்து உயர்வு வழங்கப்படுவதால், சுமார் 43,247 ஊழியர்கள் இதன் பயனாளர்களாக இருப்பார்கள். மேலும், 2010 ஏப்ரல் 1க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு NPS பங்களிப்பு 10% இலிருந்து 14% ஆக உயர்த்தப்படும் ஏற்பாடு இதில் இடம்பெற்றுள்ளது.
குடும்ப ஓய்வூதியம் உயர்வு
மேலும் NABARD ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம், அலவன்ஸ், பென்ஷன் திருத்தம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது 2022 நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் வகையில், NABARD-இன் Group A, B, C ஊழியர்களுக்கு 20% வரை சம்பள உயர்வு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் சுமார் 3,800 ஓய்வுபெற்ற/முன்னாள் ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த மாற்றங்களால் பலரின் மாத வருமானம் உயருவதோடு, நிலையான நிதி பாதுகாப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

