இந்தியாவில் பெரிய தங்கப் புதையல் கிடைச்சாச்சு.. எங்கு? எத்தனை டன் தெரியுமா?
இந்தியாவில் தற்போது புதிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொருளாதாரத்திற்கு புதிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தங்கச் சுரங்கம்
இந்தியாவின் ஒடிசா மாநிலம் புதிய தங்கச் சுரங்க மையமாக உருவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. புவியியல் ஆய்வு மையம் (GSI) நடத்திய ஆய்வில், தேவ்கர் (அடாசா–ராம்பள்ளி), சுந்தர்கர், நவரங்கபூர், கேயோன்ஜார், அங்குல், கொராப்புட் மாவட்டங்களில் தங்கக் களஞ்சியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மாயூர்பஞ்ச், மல்கான்கிரி, சாம்பல்பூர், பௌத் பகுதிகளில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மார்ச் 2025-இல், ஒடிசா சுரங்கத்துறை அமைச்சர் விபூதி புஷன் ஜீனா சட்டமன்றத்தில் இதை உறுதிப்படுத்தினார்.
எவ்வளவு தங்கம் கிடைத்துள்ளது?
அதிகாரப்பூர்வ எண்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் புவியியல் சான்றுகளின் அடிப்படையில், 10–20 மெட்ரிக் டன் தங்கம் இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது பெரிய அளவு என்றாலும், இந்தியா ஆண்டுதோறும் இறக்குமதி செய்யும் 700–800 மெட்ரிக் டன் தங்கத்துடன் ஒப்பிடுகையில் மிகச் சிறியது. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் உற்பத்தியாகிய தங்கம் வருடத்திற்கு 1.6 டன் மட்டுமே. எனவே, ஒடிசாவில் கிடைத்துள்ள தங்கம் இந்தியாவின் தங்கச் சந்தையை மாற்றாது. ஆனால், உள்நாட்டு உற்பத்திக்கான புதிய வாயில்களைத் திறக்கிறது.
அரசின் நடவடிக்கைகள்
ஒடிசா அரசு, ஒடிஷா மைனிங் கார்ப்பரேஷன் (OMC) மற்றும் GSI இணைந்து இந்த கண்டுபிடிப்புகளை வணிகரீதியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தேவ்கர் பகுதியில் முதலாவது தங்கச் சுரங்க பிளாக்கை ஏலத்தில் விடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், அடாசா-ராம்பள்ளி மற்றும் கோபூர்-காசிபூர் பகுதிகளில் ஜிஎஸ்ஐ தனது ஆய்வுகளை விரிவாக்கி வருகிறது.
பொருளாதார பலன்
இந்த தங்கச் சுரங்கங்கள் பகுதி வளர்ச்சியை வேகப்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சுரங்கத் துறை, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் முதலீடு அதிகரிக்கும். இறக்குமதிக்கு குறைந்தாலும், பெரிய அளவில் மாற்றம் வராது. இருப்பினும், ஒடிசாவின் ஏற்றுமதி வளங்கள் பலவிதமாகி, இந்தியாவின் சுரங்கப் பொருளாதாரம் வலுவடையும். ஏற்கனவே ஒடிசாவில் நாட்டின் 96% குரோமைட், 52% பாக்சைட், 33% இரும்புத் தாது இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா தங்கக் களஞ்சியம்
இனி, சுரங்கத் தரத்தை உறுதி செய்ய ஆய்வக பரிசோதனைகள் நடைபெறும். அதன் பின் வணிக ரீதியான சாத்தியத்தை மதிப்பிடும் தொழில்நுட்பக் குழுக்கள் அமைக்கப்படும். MMDR சட்ட விதிமுறைகளின் கீழ் வெளிப்படையான ஏலம், சுற்றுச்சூழல்–சமூக தாக்க மதிப்பீடு, சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.