FASTag: ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் இலவசம்..! சூப்பர் அறிவிப்பு..! வாகன ஓட்டிகள் குஷி!
சுங்கச்சாவடிகளில் அசுத்தமாக இருக்கும் கழிவறைகள் குறித்து புகார் அளித்தால் ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் இலவசம் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. ரூ.1,000 பெற என்னென்ன செய்ய வேண்டும்? என்ன விதிமுறைகள் உள்ளன? என்பது குறித்து பார்ப்போம்.

₹1,000 FASTag Recharge Free
இந்தியா முழுவதும் தேசிய நெஞ்சாலைகளில் டோல் கேட் எனப்படும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டோல் கேட்டில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிகுவத்து நிற்பதை தவிர்க்க ஆன்லைன் வாயிலாக சுங்ககட்டணம் கட்டும் பாஸ்டேக் (FASTag) சேவை கொண்டு வரப்பட்டது.
ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் இலவசம்
ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கழிவறைகளை அமைத்துள்ளது. இந்த கழிவறைகளை சுத்தமாக வைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் அசுத்தமாக இருக்கும் கழிவறைகள் குறித்து புகார் அளித்தால் ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் இலவசமாக செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
கழிவறை படங்களை அனுப்ப வேண்டும்
அதாவது அசுத்தமாக இருக்கும் சுங்கச்சாவடிகளின் கழிவறை படங்களை 'ராஜ்மார்க்யாத்ரா' (Rajmargyatra) செயலியில் அந்த இடம், புகைப்படம் எடுத்த நேரம் ஆகிய விவரங்களுடன் பதிவிட வேண்டும். அத்துடன், புகைப்படம் எடுத்து அனுப்புபவரின் பெயர், இடம், வாகனப் பதிவு எண் (VRN) மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களையும் உள்ளிட வேண்டும்.
தொகை எப்படி கிடைக்கும்?
அசுத்தமான கழிப்பறைகளைப் புகாரளிக்கும் ஒவ்வொரு வாகனப் பதிவு எண்ணுக்கும் (VRN), ₹1,000 மதிப்புள்ள ஃபாஸ்டேக் ரீசார்ஜ் வெகுமதி வழங்கப்படும். இந்தத் தொகை, பயனர் வழங்கிய VRN உடன் இணைக்கப்பட்ட ஃபாஸ்டேக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த பணத்தை டிரான்ஸ்பர் செய்ய முடியாது. இதை கையில் பணமாகவும் பெற முடியாது. ஃபாஸ்டேக்கில் ரூ.1000 ரீசாஜ் செய்யப்படும். அதை சுங்கச்சாவடிகளை கடக்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த விதிமுறைகள் முக்கியம்
இதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு வாகன பதிவு எண்ணும் ஒரு முறை மட்டுமே ஃபாஸ்டேக் ரீசார்ஜ் வெகுமதி பெற முடியும். அதேபோல், ஒரு குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைக் கழிப்பறை வசதிக்கு, எத்தனை புகார்கள் வந்தாலும், ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே வெகுமதிக்குக் கருதப்படும்.
NHAI அதிகார வரம்பின் கீழ் கட்டப்பட்ட அல்லது பராமரிக்கப்படும் கழிப்பறைகள் மட்டுமே இந்த வெகுமதி திட்டத்தின் கீழ் வரும். பெட்ரோல் நிலையங்கள், தாபாக்கள் அல்லது NHAI கட்டுப்பாட்டில் இல்லாத பிற பொது வசதிகளில் உள்ள கழிப்பறைகள் இதில் சேராது.
AI படங்கள் நிராகரிக்கப்படும்
ஒரே நாளில் ஒரே கழிப்பறைக்கு பல புகார்கள் பெறப்பட்டால், ராஜ்மார்க்யாத்ரா செயலி மூலம் முதலில் புகாரளிக்கப்பட்ட சரியான புகைப்படம் மட்டுமே வெகுமதிக்குத் தகுதியுடையதாகக் கருதப்படும். செயலி மூலம் எடுக்கப்பட்ட, தெளிவான படம் மற்றும் நேர முத்திரையிடப்பட்ட (time-stamped) படங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
ஏதேனும் மாற்றப்பட்ட, நகல் அல்லது ஏற்கனவே புகாரளிக்கப்பட்ட படங்கள் நிராகரிக்கப்படும். சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள், செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் திரையிடப்பட்டு, தேவைப்பட்டால், கைமுறைச் சரிபார்ப்பு (manual validation) மூலமும் உறுதிசெய்யப்படும்.