- Home
- Business
- Women Entrepreneurs: வெறும் ரூ.500 முதலீட்டில் தொடங்கி மாதம் ரூ.7 லட்சம் வருமானம்... கிராமத்து மண்ணில் இருந்து சாதித்த 5 இந்தியப் பெண்கள்!
Women Entrepreneurs: வெறும் ரூ.500 முதலீட்டில் தொடங்கி மாதம் ரூ.7 லட்சம் வருமானம்... கிராமத்து மண்ணில் இருந்து சாதித்த 5 இந்தியப் பெண்கள்!
பெரிய முதலீடுகளோ வசதிகளோ இன்றி கிராமப்புற வளங்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு 5 இந்தியப் பெண்கள் தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கியுள்ளனர். தன்னம்பிக்கையால் அசாத்திய சாதனைகளைப் படைத்துள்ளனர்.

கிராமத்து மண்ணிலிருந்து சாதித்த 5 இந்தியப் பெண்கள்!
ஸ்டார்ட்-அப் என்றாலே பெங்களூருவோ, மும்பையோ, கோட்-சூட் போட்ட முதலீட்டாளர்களோ தான் நம் நினைவுக்கு வருவார்கள். ஆனால், எந்தவித ஆடம்பர முதலீடுகளும் இன்றி, கையில் கிடைத்த எளிய வளங்களை வைத்துக்கொண்டு, இந்தியக் கிராமங்களின் அடிமட்டத்திலிருந்து ஒரு அமைதியான தொழில்புரட்சியை நடத்தி வருகிறார்கள் சில பெண்கள்.
தோல்விகள், இழப்புகள், குடும்பச் சூழல் என அடுக்கடுக்கான தடைகளைத் தாண்டி, பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களை உருவாக்கி நிற்கும் 5 பெண் தொழில்முனைவோரின் அசாத்தியப் பயணம் குறித்து பார்ப்போம்.
1. கையில் ரூ.500... இன்று மாதம் ரூ.7 லட்சம் வருமானம்!
கனிகா தாலுக்தார் (அசாம்) – கழிவில் இருந்து செல்வம்
தனது 27-வது வயதில் கணவரை இழந்தபோது, கையில் பச்சிளம் குழந்தையுடனும் அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியின்றியும் தவித்தார் அசாமின் கனிகா தாலுக்தார். கவலைப்பட்டு முடங்கிவிடாமல், 2014-ல் கையில் இருந்த வெறும் ரூ.500 பணத்தை முதலீடாக்கினார். கிராமத்தில் எளிதாகக் கிடைத்த மாட்டுச் சாணம் மற்றும் பயிர்க் கழிவுகளைச் சேகரித்து, மண்புழு உரத் தயாரிப்பில் இறங்கினார்.
ஆரம்பத்தில் வயிற்றுப் பிழைப்புக்காகத் தொடங்கிய அந்த முயற்சி, இன்று மாதந்தோறும் 90 டன் இயற்கை உரங்களை உற்பத்தி செய்யும் மாபெரும் தொழிற்கூடமாக மாறியுள்ளது. மாதத்திற்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டும் கனிகா, விவசாயிகளுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் உரம் வழங்குவதோடு நில்லாமல், ஆயிரக்கணக்கான எளிய மக்களுக்கு இந்தத் தொழிலை இலவசமாகக் கற்றுக்கொடுத்து வருகிறார்.
2. 10-ம் வகுப்பு டிராப் அவுட்... 15,000 பேருக்கு குரு!
ரூபி பரீக் (ராஜஸ்தான்) – விவசாயத்தின் புதிய முகம்
10-ம் வகுப்புக்குப் பிறகு படிக்க வழியில்லை; 19 வயதிலேயே திருமணம். ஆனால் கிராமத்து அடுப்படியில் தன் வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது என்பதில் ராஜஸ்தானின் ரூபி பரீக் உறுதியாக இருந்தார். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், குடும்பத்தின் 12 ஏக்கர் ரசாயனப் பண்ணையைக் கையில் எடுத்து, அதை முழு இயற்கை விவசாயப் பண்ணையாக மாற்றிக் காட்டினார்.
வழக்கமான பயிர்களை விட, மண்புழு உரம் மற்றும் அசோலா போன்ற பண்ணை இடுபொருட்கள் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என நிரூபித்தார். இன்று அவரது பண்ணை ஒரு வணிகக் களம் மட்டுமல்ல; 15,000-க்கும் மேற்பட்டோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி அளித்து, ஊருக்கே வழிகாட்டும் ஒரு அறிவு மையமாகவும் திகழ்கிறது.
3. தந்தையின் இழப்பு... சமையலறையிலிருந்து துபாய் வரை விரிந்த பிராண்ட்!
ஃபிரான்சி ஜோஷிமோன் (கேரளா) – அன்பும் ஆரோக்கியமும் கலந்த உணவு
ரசாயனம் கலந்த உணவுகளால் தன் தந்தை புற்றுநோய்க்குப் பலியான தருணம், கேரளாவின் ஃபிரான்சி ஜோஷிமோனை உலுக்கியது. இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்ற நோக்கில், ஆரோக்கியமான மாற்று உணவைத் தர முடிவெடுத்தார். வேறு எங்கும் செல்லவில்லை; தனது வீட்டுச் சமையலறையிலேயே இயற்கை உணவுப் பதப்படுத்தும் முயற்சியைத் தொடங்கினார்.
அந்தச் சிறு முயற்சி இன்று 20-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுடன், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) ஏற்றுமதி செய்யும் சர்வதேச பிராண்டாக உருவெடுத்துள்ளது. ஆரோக்கியமான உணவை உலகிற்குத் தருவதோடு, தன் கிராமத்துப் பெண்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி சுயசார்பை உருவாக்கியுள்ளார்.
4. பாலைவனத்தின் 'வெள்ளை தங்கம்'... தேசிய சந்தையைக் கலக்கும் 27 வயதுப் பெண்!
ஆக்ரிதி ஸ்ரீவஸ்தவா (ராஜஸ்தான்) – ஒட்டகப் பால் புரட்சி
ஆராய்ச்சியாளராக இருந்து தொழில்முனைவோராக மாறிய 27 வயதான ஆக்ரிதி ஸ்ரீவஸ்தவா, ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் யாருமே பெரிதாகக் கண்டுகொள்ளாத ஒட்டகப் பாலின் மகத்துவத்தைக் கவனித்தார். அதன் மருத்துவக் குணங்களையும் சந்தை மதிப்பையும் உணர்ந்து, அதற்கென ஒரு தனித்துவமான பிராண்டை உருவாக்கினார்.
பாலைவனத்தில் நாடோடிகளாகத் திரியும் 5,000-க்கும் மேற்பட்ட ஒட்டக மேய்ப்பாளர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களை நகர்ப்புற சந்தைகளுடன் இணைத்தார். பாரம்பரியத்தையும் நவீன விநியோகச் சங்கிலியையும் இணைத்ததன் மூலம், நாடோடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த குறைந்த கார்பன் பால் பண்ணை சூழலியலையும் (Ecosystem) உருவாக்கியுள்ளார்.
5. அப்பாவுக்கு உதவிய சிறுமி... இன்று ₹1 கோடி பண்ணையின் உரிமையாளர்!
ஷ்ரத்தா தவான் (மகாராஷ்டிரா) – எருமைப் பண்ணை முதல் கோடிகள் வரை
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷ்ரத்தா தவான், சிறு வயதிலிருந்தே தன் தந்தையின் எருமை மாடு வியாபாரத்திலும் பால் பண்ணை வேலைகளிலும் தோளோடு தோள் நின்றவர். கிராமப்புறத்தில் சந்தை வாய்ப்புகளும் முதலீடும் எளிதில் கிடைக்காத சூழலிலும், தளராமல் தனது குடும்பத் தொழிலைப் படிப்படியாக நவீனப்படுத்தினார்.சிறு வணிகமாகத் தொடங்கிய இவரது பால் பண்ணை, இன்று ரூ.1 கோடி மதிப்பிலான நிறுவனமாகப் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளது.
தினமும் சுமார் 350 லிட்டர் பால் விற்பனை, உபரி வருமானமாக மண்புழு உரம் என அசத்தும் ஷ்ரத்தா, மற்ற விவசாயிகளுக்கும் முறையான பயிற்சிகளை வழங்கி அப்பகுதியின் பால் பண்ணைக் கட்டமைப்பையே பலப்படுத்தி வருகிறார்.வெற்றிக்குத் தேவை வங்கி பேலன்ஸ் அல்ல; அசைக்க முடியாத தன்னம்பிக்கை மட்டுமே.
பெரிய நிதி ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், தெளிவான பார்வையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்த ஒரு எளிய கிராமத்து மூலை இருந்தும் உலகத்தரம் வாய்ந்த வணிகங்களை உருவாக்க முடியும் என்பதை இந்த ஐந்து பெண்களும் செயலில் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

