ரூ.25,000 சம்பளத்துக்கு பிஎப் கட்டாயம்.. இபிஎப்ஓவில் புதிய மாற்றம்.. உடனே படிங்க
இபிஎப்ஓ தனது கட்டாய பங்களிப்புக்கான மாத சம்பள வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்தால் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎப்ஓ புதிய அறிவிப்பு
ஊழியர் நல நிதியமைப்பு (EPFO) தனது விதிகளில் பெரிய மாற்றத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. தற்போது EPF மற்றும் EPS திட்டங்களில் கட்டாய பங்களிப்புக்கான மாத சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. ஆனால் வரும் மாதங்களில் இதை ரூ.25,000 ஆக உயர்த்தும் முயற்சி நடைபெறுகிறது. இதற்கான இறுதி முடிவு EPFO மைய நிர்வாக குழுவின் அடுத்த கூட்டத்தில் டிசம்பர் அல்லது ஜனவரியில் எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது ரூ.15,000 க்கும் மேல் அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்கள் EPF மற்றும் EPS யில் சேருவது விருப்பத்துக்கேற்ப மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பள வரம்பு உயர்வு
மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் உள் மதிப்பீட்டின்படி, சம்பள வரம்பை ரூ.10,000 உயர்த்தினால் மேலும் ஒரு கோடிக்கும் அதிகமானோரின் சமூக பாதுகாப்பு நன்மைகள் பெறும் வாய்ப்பு உண்டு என்று கூறினார். பல தொழிற்சங்கங்கள் இதற்காக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக பெருநகரங்களில் குறைந்த மற்றும் நடுத்தர திறனுடைய தொழிலாளர்கள் ரூ.15,000 க்கும் மேல் சம்பளம் பெறுகிறார்கள். எனவே, புதிய வரம்பு அவர்கள் அனைவரையும் EPFO இன் கீழ் கொண்டுவரும் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
ஊழியர் நல நிதி
தற்போதைய விதிப்படி, ஊழியரும், முதலாளியும் தலா 12% வீதம் மாத சம்பளத்தில் இருந்து EPFக்கு பங்களிக்க வேண்டும். இதில், ஊழியரின் முழு 12% EPF கணக்கில் செல்கிறது; முதலாளியின் பங்கு 3.67% EPFக்கு, 8.33% EPSக்கு ஒதுக்கப்படுகிறது. சம்பள வரம்பு உயர்ந்தால் EPF மற்றும் EPS நிதிகள் வேகமாக வளர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் மற்றும் வட்டி சேர்க்கைகள் கிடைக்கும். தற்போது EPFO வின் மொத்த நிதி சுமார் ரூ.26 லட்சம் கோடி அளவுக்கு உள்ளது; செயலில் உள்ள உறுப்பினர்கள் 7.6 கோடியாக உள்ளனர்.
தொழிலாளர் அமைச்சகம்
இதுபற்றி நிபுணர்கள் கூறுவதாவது, சம்பள வரம்பை ரூ.15,000 முதல் ரூ.25,000 ஆக உயர்த்துவது சமூக பாதுகாப்பு வலையத்தை விரிவாக்கும் முக்கியமான மற்றும் முன்னேற்றமான நடவடிக்கை ஆகும். இது இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் அனைவருக்கும் நீண்ட கால நிதி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய நன்மைகளை உறுதிப்படுத்தும். பொருளாதார அலைச்சல்கள் அதிகரித்துள்ள நிலையில், இது எதிர்கால நிம்மதிக்கான முக்கிய அடித்தளமாக இருக்கும் என அவர்கள் விளக்குகின்றனர்.