Electric Vehicle: இதெல்லாம் தெரிஞ்சுக்காட்டி Insurance பணம் அவ்ளோதான்!
மின்சார வாகனங்களுக்கு காப்பீடு செய்யும் போது பேட்டரி, மோட்டார், சார்ஜிங் சாதனங்கள் போன்றவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கோ-பேமென்ட், விலக்குகள் போன்றவற்றை புரிந்து முழுமையான பாதுகாப்பு தரும் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.

மின்சார வாகனம் - சரியான காப்பீடு தேவை
மின்சார வாகனம் வாங்கும் போது அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சரியான காப்பீடு தேர்வு செய்ய வேண்டும். பேட்டரி, மோட்டார், சார்ஜிங் சாதனங்கள், சேன்சார்கள் என பல்வேறு கூறுகளுக்கும் தனி கவனிப்பு தேவைப்படுகிறது. கோ-பேமென்ட், விலக்கு, ரைடர்கள் போன்ற சிறிய விஷயங்களை நன்கு புரிந்துகொண்டு, முழுமையான பாதுகாப்பு தரும் காப்பீடுகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.காப்பீடு = நிதிச் சுமையை குறைக்கும் நல்ல முதலீடு!
மின்சார வாகனத்திற்கு காப்பீடு செலவு – எடுத்துக்காட்டு
ஒரு EV காரின் விலை ₹12.50 லட்சம் என வைத்துக்கொண்டால், அதன் Insured Declared Value (IDV) ₹11.80 லட்சமாக இருக்கும். இதற்கான மூன்றாம் நபர் காப்பீடு ஆண்டிற்கு ₹7,900 வரை, மற்றும் வாகன சேத காப்பீடு (Own Damage Cover) ₹9,600 வரை வரும். மொத்தம் ஆண்டுக்கான காப்பீடு செலவு சுமார் ₹17,500 ஆகும். இதில் கூடுதல் ரைடர் பாலிசிகளை இணைத்தால், செலவு இன்னும் அதிகரிக்கலாம். ஆனால் அதன் பாதுகாப்பு மதிப்பு மிகவும் உயர்ந்தது.
பேட்டரி கவரேஜ் – உங்கள் வாகனத்தின் இதயம்
மின்சார வாகனத்தின் மிக முக்கியமான கூறு அதன் பேட்டரி. வாகனத்தின் மொத்த விலையில் 40%–50% வரை பேட்டரியின் விலை இருக்கும். ஆனால் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் வழக்கமான பாலிசிகளில் பேட்டரிக்கு கவரேஜ் வழங்குவதில்லை. இதனால், பேட்டரி பழுதடைந்தால் க்ளெய்ம் கிடைக்காமல் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். அதனாலேயே, பேட்டரிக்கான துணைப் பாலிசிகளை (Rider Policy) எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக, வாகனம் வாங்கியதிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் பேட்டரிக்கு தனியாக காப்பீடு பெறுவது பாதுகாப்பான முடிவாக இருக்கும்.
கவரேஜ் & பிரீமியம் – ஒன்றுக்கு ஒன்று பொருத்தம் வேண்டும்!
மின்சார வாகனத்தின் மாடல், பேட்டரியின் திறன், மற்றும் வாகனத்தின் பயன்பாட்டு சூழ்நிலை ஆகியவை கவரேஜ் தொகையையும், பிரீமியம் கட்டணத்தையும் தீர்மானிக்கின்றன. வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் கூடுதல் பிரீமியம் வசூலிக்கப்படும். ஒருங்கிணைந்த காப்பீடு (Comprehensive Insurance) இருந்தாலும், சில உதிரிப்பாகங்கள் தேய்மானம் காரணமாக முழுமையாக க்ளெய்ம் செய்ய இயலாது. முழு இழப்பீட்டுத் தொகையை பெற விரும்பினால், ‘Zero Depreciation Cover’ போன்ற கூடுதல் பாதுகாப்புகளை இணைத்துக் கொள்ள வேண்டும்.
க்ளெய்ம் தொகையை பாதிக்கும் அம்சங்கள்
பாலிசிகளில் Co-payment மற்றும் Deductible என்ற இரு முக்கிய நிபந்தனைகள் உண்டு. Co-payment என்பது க்ளெய்ம் தொகையில் ஒரு பகுதியை வாடிக்கையாளர் நேரடியாக செலுத்தவேண்டும் என்பதைக் குறிக்கும். Deductible என்பது ஒரு குறிப்பிட்ட தொகைக்கு கீழான சேதங்களுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதைக் குறிக்கும். இவை இரண்டும் சேரும் பட்சத்தில், க்ளெய்ம் செய்யும் போது கிடைக்கவேண்டிய தொகை வெகுவாக குறைந்து விடும். எனவே இந்த நிபந்தனைகள் குறைவாக உள்ள பாலிசிகளை தேர்வு செய்தால் நன்மை அதிகம்.
ரைடர் பாலிசிகள் – கூடுதல் பாதுகாப்புக்கான துணை பாலிசிகள்
பேட்டரிக்கும், மோட்டாருக்கும் தனிப்பட்ட காப்பீடுகள், தேய்மானம் இல்லாத கவரேஜ் (Zero Dep) மற்றும் சாலையோர உதவி (Roadside Assistance Cover) போன்றவை ரைடர் பாலிசியாக சேர்க்கப்படலாம். ரைடர் பாலிசிகள் சிறிது கூடுதல் செலவாக இருப்பினும், அவற்றால் பெறும் நன்மை அதிகம். முக்கியமாக, EV வாகனங்களில் மோட்டார் பழுது, பேட்டரி சிக்கல் போன்றவை அதிகமாக ஏற்படும் என்பதால், இவை உள்ள பாலிசிகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.
சார்ஜிங் சாதனங்கள், சென்சார், கேமரா – கவர் செய்யப்படுகிறதா?
மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய பயன்படும் சாதனங்கள் வீட்டிலேயே நிறுவப்படுகின்றன. இவை மற்றும் வாகனத்தில் உள்ள சென்சார், கேமரா போன்ற டெக்-அக்சஸரிகளுக்கு சேதம் ஏற்பட்டால் சில நிறுவனங்கள் மெயின் பாலிசியில் கவர் செய்தாலும், சிலர் அதை துணை பாலிசியாகவே வழங்குகிறார்கள். இந்த வகை சாதனங்களுக்கும் உரிய ரைடர் பாலிசிகளை சேர்த்து விடுவது நன்மை தரும். பல சமயங்களில் மின்சார வாகனங்கள் தானாக தீ பற்றுவதும் திருட்டுகளும் நடைபெறுவதால், இந்த வகை ஆபத்துகளுக்கான முழுமையான காப்பீடுகள் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்