- Home
- Business
- AI: எதையும் கண்ண மூடிட்டு நம்பாதீங்க.! "ஏஐ" குறித்து கடும் எச்சரிக்கை விடுத்த சுந்தர் பிச்சை.!
AI: எதையும் கண்ண மூடிட்டு நம்பாதீங்க.! "ஏஐ" குறித்து கடும் எச்சரிக்கை விடுத்த சுந்தர் பிச்சை.!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முழுமையாக நம்புவது ஆபத்தானது என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரித்துள்ளார். AI வழங்கும் தகவல்களை இறுதி முடிவாக கருதாமல், அதனை ஒரு கருவியாக மட்டுமே பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

AI ஆபத்தானது, எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளவில் மிக வேகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பி செயல்படுவது ஆபத்தானது என கூகுள் நிறுவனம் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரித்துள்ளார். ஏஐ மென்பொருட்கள் பல துறைகளில் உதவியாக இருந்தாலும், அவை இன்னும் முழுமையான துல்லியத்தை அடையவில்லை என்பதால், பயனர்கள் இதைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
AI வழங்கும் தகவல்களை இறுதி முடிவாக கருதக்கூடாது
சுந்தப் பிச்சை அளித்துள்ள பேட்டியில், செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் திறனை அதிகரிக்க உதவும் கருவி. ஆனால் மக்கள் AI வழங்கும் தகவல்களை இறுதி முடிவாக கருதக்கூடாது என தெரிவித்துள்ளார். அது ஒரு கூடுதல் ஆதாரமாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவு்ம சுந்தர் பிச்சை கூறினார். கூகுள் உருவாக்கிய ஜெமினி போன்ற மேம்பட்ட மாடல்களுமே தவறுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதை அவர் மறைக்கவில்லை.
பொறுப்புடன் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்
மேலும், AI துறையில் தற்போது உருவாகியிருக்கும் முதலீட்டு வெடிப்பு குறித்து அவர் கவலை தெரிவித்தார். சந்தையில் ஏஐ நிறுவனங்களின் மதிப்பு மிகையாக உயர்த்தப்படுவதால், இது "AI பப்பிள்" எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இது டாட்-காம் பப்பிள் உடைந்த காலத்துடன் ஒப்பிடத்தக்க நிலை என்றும், அந்த பப்பிள் உடைந்தால் உலகின் எந்த பெரிய நிறுவனமும் அதன் தாக்கத்திலிருந்து முற்றிலும் தப்ப முடியாது என்றும் பிச்சை எச்சரித்தார்.
கூகுள் போன்ற நிறுவனங்களும் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சிலர் வலுவாக மீளலாம், ஆனால் முழுமையாக பாதிப்பு இல்லாமல் இருப்பது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏஐ துறையில் கூகுள் தொடர்ந்து பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, பிரிட்டனில் ஏஐ ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பல பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனினும், ஏஐ வளர்ச்சிக்கு மிக அதிக மின்சார பயன்பாடு தேவைப்படும் என்பதால், கூகுளின் கார்பன் நெட்-சீரோ நோக்கு தாமதப்பட வாய்ப்புள்ளதாகவும் பிச்சை தெரிவித்தார்.
ஏஐ மனிதர்களை மாற்ற வரும் தொழில்நுட்பம் அல்ல என்றும் நம்மை மேலும் திறமையாக மாற்ற உதவும் கருவி மட்டுமே என குறிப்பிட்ட அவர், அதனை பொறுப்புடன் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

