- Home
- Business
- மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா..! இனி வேலையில் சேர சிபில் ஸ்கோர் கட்டாயம்..! அதிரடி அறிவிப்பு!
மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா..! இனி வேலையில் சேர சிபில் ஸ்கோர் கட்டாயம்..! அதிரடி அறிவிப்பு!
வங்கிப்பணிகளில் சேர சிபில் ஸ்கோர் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எந்தெந்த வேலைகளில் சேர சிபில் ஸ்கோர் வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

CIBIL Score Is Mandatory For Banking Jobs
இந்தியாவில் சிபில் ஸ்கோர் குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. CIBIL கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு முக்கியமான ஒரு கருவியாக அமைந்துள்ளது. இது ஒரு நபரின் கடன் வரலாறு, கடன் திருப்பிச் செலுத்தும் பழக்கம் மற்றும் நிதி நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் எளிதில் கடன் கிடைக்கும். அதே வேளையில் குறைவான சிபில் ஸ்கோர் இருந்தால் கடன் வாங்குவதில் சிக்கல் ஏற்படும்.
நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் தான் வேலை
பொதுவாக சிபில் ஸ்கோர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்பங்களுக்கு முக்கியமானதாக கருதப்பட்டாலும் இப்போது நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிலை வந்துள்ளது. வங்கிப் பணிகளுக்கு செல்பவர்கள் குறைந்தபட்சம் CIBIL மதிப்பெண்ணை 650 அல்லது அதற்கு மேல் பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா என்று மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் நிதி அமைச்சகத்திடம் கேட்டார்.
வங்கிப்பணிக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம்
இதற்கு பதில் அளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, வங்கிப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 650 CIBIL ஸ்கோரையும் ஆரோக்கியமான கடன் வரலாற்றையும் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஆட்சேர்ப்புத் தேர்வை நடத்தும் IBPS (வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்), 2023-24 (CRP-XIII) ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் இந்த நிபந்தனையை விதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வேலையில் சேர சிபில் ஸ்கோர் ஏன் தேவை?
இப்போது பல நிறுவனங்கள், குறிப்பாக நிதி, வங்கி, மற்றும் மேலாண்மைத் துறைகளில் வேலைக்கு விண்னப்பிப்பவர்களின் CIBIL ஸ்கோர் ஆய்வு செய்யப்படுகின்றன. நிதித் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலும் முக்கியமான பணப் பரிவர்த்தனைகளைக் கையாள வேண்டியிருக்கும். குறைந்த CIBIL ஸ்கோர் வைத்திருப்பவர்களின் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதாக நிறுவனங்கள் கருதுகின்றன.
இளைஞர்கள் புலம்பல்
நிதி மோசடி அல்லது பொறுப்பற்ற நடத்தைக்கு வாய்ப்பு உள்ளவர்களை பணியமர்த்துவது தங்களுக்கு ஆபத்தாக இருக்கலாம் எனக்கருதும் பல்வேறு நிறுவனங்கள் வேலைக்கு சேருபவர்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் என கொண்டு வந்துள்ளன. ஏற்கெனவே நன்றாக படித்திருந்தும், நல்ல திறமையிருந்தும் நாட்டில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்பது அவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.