- Home
- Business
- Business: ஐடியா மட்டும் உங்களுடையது, முதலீடு அரசாங்கத்துடையது! தமிழக அரசின் ரூ.10 லட்சம் மானியம் பெறுவது எப்படி?
Business: ஐடியா மட்டும் உங்களுடையது, முதலீடு அரசாங்கத்துடையது! தமிழக அரசின் ரூ.10 லட்சம் மானியம் பெறுவது எப்படி?
தமிழக அரசின் 'நான் முதல்வன்' மற்றும் TN Skills திட்டங்கள், இளைஞர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இத்திட்டங்கள் மாணவர்களுக்கு தேவையான நிதி உதவிகளையும், மானியங்களையும் வழங்குகின்றன.

இனி நீங்கதான் அம்பானி
இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்தவுடன் வேலை தேடுவது ஒரு சவாலான விஷயமாக உள்ளது. ஆனால், வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல், மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிகளாக இளைஞர்கள் மாற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு 'நான் முதல்வன்' (TN Skills) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் சாதாரண மாணவர்களையும் சாதனை படைக்கும் தொழில் முனைவோர்களாக மாற்றி வருகிறது.
பயிற்சி அளித்து பட்டை தீட்டும் TN Skills
ஒரு தொழிலைத் தொடங்க வெறும் பணம் மட்டும் போதாது, அந்தத் தொழில் குறித்த சரியான அறிவும் திறமையும் தேவை. TN Skills திட்டத்தின் கீழ், இன்றைய காலத்திற்குத் தேவையான ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI), டேட்டா சயின்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. இது தவிர, ஒரு நிறுவனத்தை எப்படித் தொடங்குவது, வாடிக்கையாளர்களை எப்படிக் கையாள்வது மற்றும் லாபகரமாகத் தொழிலை நடத்துவது எப்படி என்பது போன்ற பயிற்சிகளும் வல்லுநர்களைக் கொண்டு இலவசமாக வழங்கப்படுகின்றன.
கல்லூரியிலேயே விதைக்கப்படும் தொழில் கனவு
மாணவர்கள் படித்து முடிக்கும் வரை காத்திருக்காமல், கல்லூரி காலத்திலேயே அவர்களின் புதிய சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்க ‘தொழில் காப்பகங்கள்’மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மாணவரிடம் ஒரு நல்ல தொழில் யோசனை இருந்தால், அதை எப்படி ஒரு வெற்றிகரமான வணிகமாக மாற்றுவது என்பதற்கான வழிகாட்டுதலை இத்திட்டம் வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த வெற்றியாளர்கள் மாணவர்களுக்கு மெண்டார் எனப்படும் ஆலோசகர்களாக இருந்து வழிகாட்டுகிறார்கள்.
தொழில் தொடங்கக் கிடைக்கும் நிதியுதவி மற்றும் மானியங்கள்
தொழில் தொடங்க நினைக்கும் பலருக்கும் இருக்கும் பெரிய கவலை 'முதலீடு'. இதற்காகத் தமிழக அரசு Startup TN மற்றும் EDII-TN ஆகிய அமைப்புகள் மூலம் நிதி உதவிகளை வழங்குகிறது:
ஸ்டார்ட்-அப் மானியம்
உங்கள் தொழில் யோசனை புதுமையானதாக இருந்தால், 'TANSEED' திட்டத்தின் கீழ் தலா 10 லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்குகிறது.
மானியத்துடன் கூடிய கடன்
'NEEDS' மற்றும் 'UYEGP' போன்ற திட்டங்களின் மூலம் நீங்கள் வாங்கும் கடனில் 25% முதல் 35% வரை அரசாங்கமே மானியமாகத் தள்ளுபடி செய்கிறது. அதாவது நீங்கள் வாங்கிய கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.
யார் யாரை அணுக வேண்டும்?
இத்திட்டத்தின் பலனைப் பெற விரும்புவோர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். திறன் பயிற்சி பெற, naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் விருப்பமான துறையைத் தேர்வு செய்யலாம். நிதி உதவி பெற startuptn.in அல்லது editn.in ஆகிய தளங்களை நாடலாம். நேரடி உதவிக்கு, உங்கள் மாவட்டத்தில் உள்ள 'மாவட்டத் தொழில் மையத்தை' (District Industries Centre - DIC) அணுகினால், அரசு அதிகாரிகள் உங்களுக்கு என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை விரிவாக விளக்குவார்கள்.
வெற்றிகரமான தொழில்முனைவோராக உயர முடியும்.!
தமிழக அரசின் இந்த TN Skills மற்றும் நான் முதல்வன் திட்டங்கள், சாதாரண பின்புலம் கொண்ட இளைஞர்களுக்கும் தொழில் உலகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளன. சரியான பயிற்சியும், அரசின் நிதியுதவியும் இணையும்போது, தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞரும் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக உயர முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

