- Home
- Business
- UPI பயனர்களுக்கு குட்நியூஸ்.. நேரடியாக களமிறங்கும் வங்கிகள்.. வியாபாரிகள் எக்ஸ்டிரா கட்டணம் வாங்க செக்!
UPI பயனர்களுக்கு குட்நியூஸ்.. நேரடியாக களமிறங்கும் வங்கிகள்.. வியாபாரிகள் எக்ஸ்டிரா கட்டணம் வாங்க செக்!
UPI MDR Charges: யூபிஐ மூலம் 2000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும்போது விதிக்கப்படும் MDR கட்டணத்தை, வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை கண்காணிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

UPI பயனர்களுக்கு குட்நியூஸ்
UPI மூலம் பணம் செலுத்தும்போது விதிக்கப்படும் 'மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்' (MDR) கட்டணத்தை, வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கக் கூடாது. இதை உறுதி செய்ய, வியாபாரிகளை வங்கிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஒரு புதிய நடைமுறையை உருவாக்க உள்ளது.
MDR கட்டணத்தை வியாபாரிகள் தான் ஏற்க வேண்டும்
2,000 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் குறிப்பிட்ட யூபிஐ பரிவர்த்தனைகளுக்கான MDR கட்டணத்தை வியாபாரிகள் தான் ஏற்க வேண்டும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த கூடுதல் சுமையும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த MDR கட்டண முறையை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும், வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் கட்டணம் வசூலிப்பதை தடுப்பது குறித்தும் விவாதிக்க, இந்திய வங்கிகள் சங்கத்துடன் நிதி அமைச்சகம் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
பேச்சுவார்த்தை நடக்கும்
இதுமட்டுமில்லாமல், வியாபாரிகளின் பிரதிநிதிகள் மற்றும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) ஆகியோருடனும் நிதி அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, மாநில மொழிகளில் ஒரு பிரச்சாரத்தை இந்திய வங்கிகள் சங்கம் தொடங்க உள்ளது. யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பதை இந்த பிரச்சாரம் மூலம் தெளிவுபடுத்துவார்கள். MDR கட்டணத்தின் மீதான ஜிஎஸ்டி விதிப்பு குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் ஒரு முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதிய UPI MDR விதிமுறைகள் என்னென்ன?
புதிய UPI MDR விதிமுறைகளின்படி, ஒரு நபரிடமிருந்து வியாபாரிக்கு செய்யப்படும் 2,000 ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் MDR கட்டணம் வசூலிக்கப்படும். 75,000 ரூபாய் மற்றும் அதற்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக 300 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும்.
ஆனால், நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு அனுப்பப்படும் UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை. எவ்வளவு பணம் அனுப்பினாலும் அது முற்றிலும் இலவசம் தான். அதேபோல, வியாபாரிகளுக்கு செய்யப்படும் 2,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கும் எந்த MDR கட்டணமும் கிடையாது.
2,000 ரூபாய்க்கு மேல் ரூ.5 எம்டிஆர் கட்டணம்
யூபிஐ கியூ ஆர் கோடு மூலம் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை பணம் பெறும் சிறு வியாபாரிகளுக்கும் இந்த MDR கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசின் விளக்கப்படி, சுமார் 96 சதவீத UPI பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணத்தால் எந்த பாதிப்பும் வராது.
ரயில்வே, டெலிகாம், இன்சூரன்ஸ், பெட்ரோல் பங்குகள் மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய துறைகளில், 2,000 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வெறும் 5 ரூபாய் மட்டுமே எம்டிஆர் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த எம்டிஆர் என்பது பரிவர்த்தனைகளை கையாளுவதற்கான ஒரு சேவை கட்டணம் மட்டுமே. இது அரசு விதிக்கும் வரியோ அல்லது கூடுதல் கட்டணமோ கிடையாது என அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
ஒரு ரூபாய் கூட அரசுக்கு செல்லாது
வசூலிக்கப்படும் இந்த கட்டணம் வங்கிகள், வியாபாரிகளின் கணக்குள்ள வங்கிகள் மற்றும் யூபிஐ ஆப் நிறுவனங்களுக்கு இடையே பிரித்து வழங்கப்படும். இதில் ஒரு ரூபாய் கூட அரசுக்கு செல்லாது. இந்தியாவின் யூபிஐ கட்டமைப்பை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் செயல்பட வைக்கவே இந்த எம்டிஆர் கட்டண முறை கொண்டுவரப்பட்டுள்ளது. பேமெண்ட் உள்கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு, மோசடிகளை தடுப்பது மற்றும் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை விரிவுபடுத்துவது ஆகியவற்றுக்கு இந்த கட்டணம் உதவும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

