- Home
- Business
- Bank Strike: வங்கிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு! வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி! முழு விவரம் உள்ளே!
Bank Strike: வங்கிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு! வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி! முழு விவரம் உள்ளே!
Bank Strike: திங்கள், செவ்வாய் கிழமைகளில் வங்கிகள் இயங்காது என்று கூறப்பட்ட நிலையில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வங்கிகள் வேலைநிறுத்த எச்சரிக்கை
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்திற்கு (Bank Strike) அழைப்பு விடுத்திருந்தது. இதனால், மே 25 மற்றும் 26 தேதிகளில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. வாரத்தின் முதல் இரண்டு நாட்களான திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வங்கிகள் இயங்காது என்று கூறப்பட்டதால், அவசர வங்கி வேலைகள் உள்ளவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என கவலைப்பட்டனர்.

வங்கிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
இந்த நிலையில் கடைசி நேரத்தில் வங்கி ஊழியர் சங்கங்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளன. திட்டமிடப்பட்டிருந்த இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தை அவர்கள் ஒத்திவைத்துள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறை, வேலைநிறுத்தம் மற்றும் பண்டிகைகள் காரணமாக மே 23 முதல் 28 வரை, ஆறு நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்டது. ஆனால், வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதால் மே 25, 26 தேதிகளில் வங்கிகள் திறந்திருக்கும்.
வங்கி ஊழியர்களின் கோரிக்கை என்ன?
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் இந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும், வங்கிச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி சங்கங்கள் இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. மத்திய அரசு அலுவலகங்கள், ஆர்பிஐ, எல்ஐசி, ஜிஐசி மற்றும் பங்குச் சந்தை போல வங்கிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
தற்போது விடுமுறை நடைமுறை என்ன?
தற்போது வங்கிகளுக்கு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. 1-வது, 3-வது மற்றும் 5-வது (மாதத்தில் இருந்தால்) சனிக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம் போல் இயங்குகின்றன. இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் மத்திய அரசு இந்த 5 நாட்கள் வேலை முறைக்குக் கொள்கை அளவில் உடன்பட்டிருந்தாலும், இதற்கான இறுதி அறிவிப்பு மற்றும் வேலை நேர மாற்றம் குறித்த முறையான அரசாணை இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை. இதனால்தான் ஊழியர் சங்கங்கள் அவ்வப்போது அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி, மே 26 (காசி நஸ்ருல் இஸ்லாம் பிறந்தநாள்), மே 27 (ஈத் உல்-ஆதா) மற்றும் மே 28 (பக்ரீத்) ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை. இருப்பினும், ஆன்லைன் பேங்கிங், யுபிஐ மற்றும் ஏடிஎம் சேவைகள் தொடர்ந்து செயல்படும். இதில் பக்ரீத் பண்டிகை மட்டும் தமிழ்நாட்டுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

