இன்னும் 50 பைசா நாணயங்கள் செல்லுமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கி!
இந்தியாவில் 50 பைசா முதல் 20 ரூபாய் வரையிலான அனைத்து நாணயங்களும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உறுதிப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் RBI அறிவுறுத்தியுள்ளது.

50 பைசா நாணயம்
இந்தியாவில் 50 பைசா முதல் 20 ரூபாய் வரையிலான நாணயங்கள் செல்லுமா என்பது குறித்து மக்களிடையே நிலவி வரும் குழப்பங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் (Legal Tender) என்றும், இவற்றை மக்கள் மற்றும் வியாபாரிகள் தயக்கமின்றி பயன்படுத்தலாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
விழிப்புணர்வு பிரச்சாரம்
சமூக வலைதளங்களில் நாணயங்கள் குறித்துப் பரவி வரும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ விழிப்புணர்வு பிரச்சாரமான "RBI Kehta Hai" என்பதன் கீழ் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்கள் நாணயங்களைக் கொண்டு பரிவர்த்தனை செய்யும்போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் சிலர் நாணயங்களை வாங்க மறுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வதந்திகளை நம்பாதீர்கள்
நாணயங்கள் குறித்துப் பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்.
ஒரே மதிப்புள்ள நாணயங்கள் காலப்போக்கில் வெவ்வேறு வடிவமைப்புகளில் வெளியிடப்படலாம். பழைய மற்றும் புதிய வடிவமைப்புகள் என அனைத்துமே புழக்கத்தில் இருக்கும், அவை அனைத்தும் செல்லுபடியாகும்.
50 பைசா நாணயம்
குறிப்பாக 50 பைசா நாணயங்கள் புழக்கத்தில் குறைவாக இருந்தாலும், அவை செல்லாதவை என அறிவிக்கப்படவில்லை (Demonetized). எனவே, அவற்றையும் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
நாணயங்களில் உள்ள பல்வேறு அம்சங்கள் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன.
வியாபாரிகளுக்கு வேண்டுகோள்
சில்லறை வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் என அனைத்து மதிப்பிலான நாணயங்களும் இந்தியாவில் எங்கும் தடையின்றி செல்லுபடியாகும்.
நினைவில் கொள்ளவேண்டியவை
சுருக்கமாக ரிசர்வ் வங்கி கூறுவது:
1. நாணயங்கள் நீண்ட காலம் புழக்கத்தில் இருக்கக்கூடியவை.
2. தவறான செய்திகளை நம்பி நாணயங்களைப் புறக்கணிக்க வேண்டாம்.
3. எந்தவிதத் தயக்கமுமின்றி நாணயங்களை ஏற்றுக்கொண்டு பரிவர்த்தனை செய்யுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

