ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
ஆதார் அட்டை நகல்களை சேகரிக்கும் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு புதிய சட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது. இனி ஆதார் சரிபார்ப்பு, கியூஆர் கோடு மற்றும் புதிய மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும்.

ஆதார் புதிய விதி
ஆதார் அட்டை நகல்களை சேகரிக்கும் பழக்கத்துக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கியுள்ளது. ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகல்களை சேமிப்பதைத் தடுக்க சட்ட மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. தற்போதைய ஆதார் சட்டப்படி, ஆதார் நகல்களை வைத்திருப்பதே சட்டவிரோதம் என்பதால், இது மிகப் பெரிய பாதுகாப்பு பிரச்சனையாக மாறியுள்ளது. இதைத் தீர்க்க, இனி ஆதார் சரிபார்ப்பு செய்யும் நிறுவனங்கள் புதிய முறையில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய முறை மொபைல் ஆப் மற்றும் கியூஆர் கோடு அடிப்படையாக இருக்கும். ஆதார் விவரங்களைச் சேகரிக்காமல், கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமும் அல்லது உருவாக்கப் படும் புதிய ஆதார் மொபைல் செயலி வழியாகவும் அடையாளம் காண முடியும் என்று UIDAI விளக்கியுள்ளது. இதன் மூலம், இடைநிலை சர்வர்கள் வழியாக தரவு செல்லும் அபாயம் குறையும். ஆஃப்லைன் சரிபார்ப்பு தேவையான நிறுவனங்களுக்கு API வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் தங்கள் கணினி அல்லது மென்பொருளில் இந்த சரிபார்ப்பு வசதியை இணைக்கலாம்.
ஆதார் அட்டை நகல்
மேலும், மத்திய சர்வர் இணைப்பு தேவையில்லாமல் ‘ஆப்-டு-ஆப்’ சரிபார்ப்புக்கான புதிய மொபைல் ஆப் சோதனை நிலையில் உள்ளது. இது விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், கடைகள் போன்ற இடங்களில் எளிதாகப் பயன்படும். ஆதார் ஆவணங்களை காகித வடிவில் கையாளும் போது ஏற்படும் அபாயங்கள் குறையும், தரவு பாதுகாப்பு மேம்படவும் இந்த அமைப்பு உதவுகிறது என்று UIDAI கூறுகிறது.
இந்த புதிய செயலி மூலம் பயனர்கள் தங்கள் முகவரிகளை புதுப்பிக்கவும், மொபைல் போன் இல்லாத குடும்ப உறுப்பினர்களின் தகவல்களையும் சேர்க்க முடியும். எனவே, இத்தகைய டிஜிட்டல் சரிபார்ப்பு முறை பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் வசதியை மேம்படுத்துவது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

