ஆதார் அட்டையில் இனி பெயரை எத்தனை முறை மாற்றலாம்? மத்திய அரசின் புதிய விதி
ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களை திருத்துவதில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த சேவைகளை எளிதாக்க புதிய ஆதார் மொபைல் ஆப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதார் அப்டேட் விதிகள்
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது. அரசு மற்றும் தனியார் சேவைகள் பலவற்றிற்கும் ஆதார் கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறது. வங்கி சேவைகள், மொபைல் சிம், அரசு திட்டங்கள், வரி தொடர்பான செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆதார் விவரங்கள் சரியாக உள்ளன வேண்டும். ஆனால் பலரின் ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி அல்லது முகவரி போன்ற தகவல்களில் பிழைகள் இருப்பது வழக்கம். இதைத் திருத்துவதற்காக மக்கள் அடிக்கடி அப்டேட் செய்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசு சில புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆதார் அட்டையில் பெயர் மாற்றம்
இந்த புதிய விதிகளின்படி, ஆதார் அட்டையில் உள்ள பெயரை வாழ்நாளில் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே மாற்ற முடியும் என்று UIDAI தெரிவித்துள்ளது. மேலும் பிறந்த தேதியை ஒரே முறை மட்டும் திருத்தும் வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் தவறான தகவல்களை மீண்டும் மீண்டும் மாற்றுவது மற்றும் முறைகேடுகளை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் முகவரி மாற்றத்திற்கு தற்போது எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை, அதனால் தேவையான போது பலமுறை புதுப்பிக்கலாம்.
ஆதார் அப்டேட் புதிய நிபந்தனை
ஆதார் விவரங்களை மாற்றும்போது சில முக்கிய ஆவணங்கள் கட்டாயமாக தேவைப்படும். குறிப்பாக பிறந்த தேதியை திருத்துவதற்கு பிறப்பு சான்றிதழ் அவசியம். அதே போல் முகவரியை மாற்றுவதற்கு வாக்காளர் அட்டை, மின்சார கட்டண ரசீது, எரிவாயு பில் போன்ற ஆவணங்களை பயன்படுத்தலாம். பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணங்களும் ஆதார் அப்டேட்டில் உதவியாக இருக்கும். வேலை காரணமாக இடம் மாறி வாழும் பலருக்கு முகவரி மாற்றம் அவசியமாக இருப்பதால் இந்த வசதி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஆதார் கார்டு அப்டேட் செய்ய புதிய கட்டுப்பாடுகள்
மேலும் ஆதார் சேவைகளை எளிதாக பயன்படுத்த மத்திய அரசு புதிய ஆதார் மொபைல் ஆப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலம் வீட்டிலிருந்தபடியே சில ஆதார் சேவைகளைப் பெற முடியும். மொபைல் எண், பெயர், முகவரி போன்ற விவரங்களை புதுப்பிக்க இப்போது ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது அவசியம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் நேரத்தைச் சேமித்து, சேவைகளை விரைவாகப் பெற முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

