தீபாவளிக்கு முன் 3% DA உயர்வு.. 3 மாத பாக்கியும் கிடைக்கும்.. அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2025 முதல் 55% DA 58% ஆக உயரும். அக்டோபர் மாதத்தில் மூன்று மாத பாக்கியும் சேர்த்து வழங்கப்படும்.

தீபாவளி சம்பள உயர்வு
7வது ஊதியக் கமிஷன் (7வது ஊதியக் குழு) படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 3% விலைவாசி அலவன்ஸ் (DA/DR) உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் 55% DA, ஜூலை 2025 முதல் 58% ஆக உயர்கிறது. இதன் மூன்று மாத பாக்கியும் அக்டோபர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று மாத பாக்கி தொகை
மொத்தம் 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் இந்த உயர்வு பலன் தர உள்ளது. வழக்கம்போல், ஜனவரி-ஜூன் காலத்திற்கு ஹோலிக்கு முன், ஜூலை-டிசம்பர் காலத்திற்கு தீபாவளிக்கு முன் அரசு DA உயர்வை அறிவிக்கிறது. இந்த வருடம் தீபாவளி அக்டோபர் 20, 21-ந்தேதிகளில் வருவதால், அக்டோபர் முதல் கூடுதல் சம்பள உயர்வு மற்றும் மூன்று மாத பாக்கி தொகை கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்கள்
உதாரணமாக, அடிப்படை ஊதியம் ரூ.18,000 பெறும் ஊழியர் இதுவரை ரூ.9,900 (55%) பெற்றார். இப்போது 58% உயர்வால் ரூ.10,440 கிடைக்கும். மாதந்தோறும் ரூ.540 அதிகம் வரும். மேலும், ரூ.20,000 ஓய்வூதியம் பெறும் ஒருவர் ரூ.11,000 பெற்றிருந்தால், இப்போது ரூ.11,600 கிடைக்கும். அதாவது மாதந்தோறும் ரூ.600 கூடுதல் வருமானம்.
7வது கமிஷனின் கடைசி உயர்வு
இந்த உயர்வு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது 7வது ஊதியக் கமிஷனின் கடைசி DA உயர்வாக இருக்கும். 7வது கமிஷன் காலம் 2025 டிசம்பர் 31-ஆம் தேதி முடிகிறது. அதற்குப் பிறகு 8வது ஊதியக் கமிஷன் (8வது CPC) செயல்படுத்தப்படும்.
8வது ஊதியக் கமிஷன் எப்போது?
அரசு ஜனவரி 2025-ல் 8வது கமிஷன் அறிவித்திருந்தாலும், தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. குறிப்பு விதிமுறைகள் (ToR) கூட தயாராகவில்லை. பொதுவாக, பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த 18 முதல் 24 மாதங்கள் ஆகும். எனவே, புதிய ஊதிய அமைப்பு 2027 இறுதி அல்லது 2028 தொடக்கத்தில் அமலுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. நிபுணர்களின் கணிப்புப்படி, 8வது கமிஷனில் சம்பள உயர்வு 30-34% வரை இருக்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

