Tata Intra EV: டாடா-வின் புதிய எலக்ட்ரிக் பிக்கப்! சிங்கிள் சார்ஜில் 211 கி.மீ. ரேஞ்ச்!
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது புதிய டாடா இன்ட்ரா EV பிக்கப் டிரக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை 11.95 லட்சம்.

Tata Launches Intra EV Electric Pickup
இந்தியாவின் மிகப்பெரிய கமர்ஷியல் வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது புதிய டாடா இன்ட்ரா EV பிக்கப் டிரக்கை அறிமுகம் செய்துள்ளது. எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனப் பிரிவில் தங்களது இடத்தைப் பலப்படுத்தும் நோக்கில், இந்த புதிய பிக்கப் டிரக் ரூ.11.95 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் என கம்பெனி தனது பிரஸ் ரிலீஸில் தெரிவித்துள்ளது. இந்த அறிமுகம் குறித்து டாடா மோட்டார்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும் சிஇஓ-வுமான கிரீஷ் வாக் பேசும்போது, "இந்த எலக்ட்ரிக் பிக்கப் மூலம், டாடா மோட்டார்ஸ் இப்போது அனைத்துப் பிரிவுகளிலும் ஒரு முழுமையான எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகன வரிசையைக் கொண்டுள்ளது," என்றார்.
டாடா இன்ட்ரா EV சிறப்பம்சங்கள்
இந்த வண்டியில் 72 கிலோவாட் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இது 230 Nm பீக் டார்க்கை உருவாக்குவதால், முழு லோடு ஏற்றப்பட்ட நிலையிலும் வண்டியைச் சுலபமாக இழுத்துச் செல்லும் திறன் கொண்டது. இந்திய வானிலை மற்றும் பயன்பாட்டுச் சூழல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட 28.2 kWh பேட்டரி இதில் உள்ளது. இதற்கு IP67 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 211 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. CCS2 சார்ஜர் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் செய்தால், வெறும் 55 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் ஏற்றிவிடலாம். இந்த பேட்டரிக்கு 6 ஆண்டுகள் அல்லது 2 லட்சம் கிலோமீட்டர் வரை வாரன்டியும் வழங்கப்படுகிறது.
வாகனங்களின் விலையை உயர்த்தும் டாடா
இதே சமயம், டாடா மோட்டார்ஸ் தொடர்பான மற்ற செய்திகளில், நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்தப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருவதால் இந்த முடிவை எடுத்ததாக கம்பெனி கூறியுள்ளது. கச்சாப் பொருட்கள் மற்றும் பிற உதிரிபாகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உற்பத்திச் செலவு கூடுகிறது. இதை ஈடுகட்ட, மாடல் மற்றும் வேரியன்ட்டைப் பொறுத்து, சராசரியாக 0.5 சதவீதம் வரை விலை உயர்த்தப்படுகிறது. வாகனத்தின் தரம் மற்றும் உற்பத்தியைத் தொடர்ந்து தக்கவைப்பதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என டாடா மோட்டார்ஸ் கூறுகிறது. செலவுகள் அதிகரித்தாலும், வாடிக்கையாளர்களுக்கு அதே நம்பகமான மற்றும் சிறந்த தரத்தை தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் கம்பெனி தெரிவித்துள்ளது.
விலை உயர்வுக்கு காரணம் என்ன?
சுவாரஸ்யமாக, டாடா மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையுமே தற்போது அதிகரித்து வரும் விலை உயர்வு அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடியும், இந்தியாவில் தனது கார்களின் விலையைச் சுமார் இரண்டு சதவீதம் உயர்த்தியுள்ளது. அதேபோல, நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியும் விலை மாற்றங்கள் குறித்துப் பரிசீலித்து வருகிறது. விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் பிற கச்சாப் பொருட்களின் விலை உயர்வு செலவுகளைப் பாதிப்பதால், எதிர்காலத்தில் விலை உயரக்கூடும் என அந்த நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.

