டாடா சியரா வாங்க போறீங்களா? டீசல் தான் “கிங்”ன்னு நிரூபிச்சுட்டாங்க
2025 நவம்பர் 25 அன்று அறிமுகமான புதிய டாடா சியரா, முதல் நாளிலேயே 70,000 முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. டீசல், பெட்ரோல், மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் விருப்பங்களுடன் இது கிடைக்கிறது.

டாடா சியரா முன்பதிவு
2025 நவம்பர் 25 அன்று டாடா நிறுவனத்தின் புதிய சியரா இந்தியாவில் அறிமுகமாகி, விற்பனையும் உடனடியாக தொடங்கியது. அறிமுகமான முதல் நாளிலேயே இந்த SUVக்கு 70,000 முன்பதிவுகள் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த புக்கிங் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாங்குபவர்களின் விருப்பத்தையும் பார்க்கும்போது, சுமார் 55% பேர் டீசல், 25% பேர் பெட்ரோல், 20% பேர் டர்போ-பெட்ரோல் மாடல்களை தேர்வு செய்வது குறிப்பிடத்தக்கது.
டாடா சியரா விலை
புதிய டாடா சியாராவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.49 லட்சம் முதல் ரூ.21.29 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டர்போ-பெட்ரோல் வேரியன்ட் விலை ரூ.17.99 லட்சம் முதல் தொடங்குகிறது. இதன் டெலிவரிகள் 2026 ஜனவரி 15 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல், இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட் போன்ற பிரபல எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியாக களமிறங்கியுள்ளது.
டாடா சியரா நிறங்கள்
டாடா சியரா ஆறு கலர்களில் கிடைக்கிறது. அந்தமான் அட்வென்ச்சர், பெங்கால் ரூஜ், மூணாறு மிஸ்ட், பிரிஸ்டைன் ஒயிட், ப்யூர் கிரே மற்றும் கூர்க் கிளவுட் என புதிய பெயர்களில் நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் தேர்வு செய்யும் வேரியன்டை பொறுத்து சில நிறங்கள் மாறுபடலாம். ஆனால் அதிக விலை கொண்ட மூன்று வேரியன்டுகளில் அனைத்து ஆறு நிறங்களும் கிடைக்கின்றன.
டாடா சியரா அம்சங்கள்
வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, சியாராவின் உற்பத்தியை உயர்த்த டாடா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் மாதத்திற்கு 7,000 யூனிட்கள் தயாரிக்க இலக்கு வைத்திருந்த நிறுவனம், தற்போது அதை 12,000 முதல் 15,000 யூனிட்கள் வரை உயர்த்தியுள்ளது. இன்ஜின் விருப்பத்தில், 1.5 லிட்டர் டீசல் மாடல் பல வேரியன்ட்களில் கிடைக்கிறது; சில டிரிம்களில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் DCA கியர்பாக்ஸ் தேர்வுடன் வருகிறது. டர்போ-பெட்ரோல் மாடல் உயர் வேரியன்ட்களில் மட்டுமே, அதுவும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வழங்கப்படுகிறது.

