- Home
- Auto
- ஒரே சார்ஜில் 711 கி.மீ ரேஞ்ச், லெவல் 2 ADAS: இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்!
ஒரே சார்ஜில் 711 கி.மீ ரேஞ்ச், லெவல் 2 ADAS: இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்!
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் மகாராஷ்டிரா புனேவில் உள்ள சாக்கன் உற்பத்தி ஆலையில் புதிய 'எலக்ட்ரிக் ஜிஎல்சி' (GLC400) சொகுசு காரின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விற்பனையை ரூ.78.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்கியுள்ளது.

மிரட்டலான செயல்திறன் மற்றும் 711 கி.மீ ரேஞ்ச்
இந்திய சந்தையில் 'GLC400' என்ற பெயரில் களமிறங்கியுள்ள இந்த சொகுசு எஸ்யூவி, 94 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 711 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும். 330 kW வரையிலான DC ஃபாஸ்ட் சார்ஜரில் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே கூடுதலாக 300 கி.மீ தூரம் வரை செல்லும் ஆற்றலை இது வழங்குகிறது.
இரட்டை மோட்டார் மற்றும் 4MATIC (AWD) ஆல்-வீல் டிரைவ் அமைப்பைக் கொண்டுள்ள இந்த கார், 360 kW (489 hp / 482.4 bhp) திறன் மற்றும் 800 Nm டார்க் விசையை உருவாக்குகிறது. இதன் மூலம் தனது பிரிவிலேயே மிகவும் சக்திவாய்ந்த காராக உருவெடுத்துள்ள இது, நின்ற இடத்திலிருந்து மணிக்கு 100 கி.மீ வேகத்தை வெறும் 4.3 வினாடிகளில் எட்டிப் பிடிக்கும் திறன் கொண்டது.
ரூ.78.50 லட்சத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் E-ஜிஎல்சி அறிமுகம்
இந்தியாவின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ், தனது புதிய எலெக்ட்ரிக் ஜிஎல்சி சொகுசு காரின் (Mercedes-Benz Electric GLC SUV) உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனையை மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சாக்கன் உற்பத்தி ஆலையில் தொடங்கியுள்ளது. இது அந்நிறுவனத்தின் இந்திய மின்மயமாக்கல் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
நடுத்தர அளவு வாகனப் பிரிவில், புதிய தலைமுறை மின்சார வாகனக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் மாடல் இதுவாகும். இதன் ஆரம்ப விலை ரூ.78.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாக்கன் ஆலை வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு காரை முறைப்படி அறிமுகம் செய்து வைத்ததுடன், அதில் பயணித்தும் பார்த்தார்.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் & AMG வடிவமைப்பு
4.85 மீட்டர் நீளம் மற்றும் 2.97 மீட்டர் வீல்பேஸுடன் தனது பிரிவிலேயே மிகப்பெரிய காராகக் காட்சியளிக்கிறது. காரின் வெளிப்புறத்தில் எலக்ட்ரிக் AMG கிரில், 20-இன்ச் AMG ஸ்பெக் வீல்கள், அலுமினியம் ரன்னிங் போர்டுகள் மற்றும் கனெக்டெட் டெயில் லேம்ப்கள் அடங்கிய AMG டிசைன் பேக் இடம்பெற்றுள்ளது.
உட்புறத்தில், பிரம்மாண்டமான MBUX ஹைப்பர்ஸ்கிரீன், டால்பி அட்மாஸுடன் கூடிய பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், பனோரமிக் கிளாஸ் ரூஃப், முன் இருக்கைகளுக்கு வென்டிலேட்டெட் மற்றும் மசாஜ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், முழு-LED லைட் பேக்கேஜ், பவர்-ஃபோல்டிங் இரண்டாம் வரிசை இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள், லெவல் 2 ADAS பாதுகாப்புத் தொகுப்பு மற்றும் ஆட்டோ-பார்க் வசதிகள் இதில் உள்ளன. பிரயாண வசதிக்காக 570 லிட்டர் பூட் ஸ்பேஸுடன் கூடுதலாக 128 லிட்டர் ஃபிரங்க் (Frunk) இடவசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரூ.3,200 கோடி முதலீடு
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், 2026-ஆம் ஆண்டில் உற்பத்தி செயல்பாடுகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய தயாரிப்புத் திட்டங்களுக்காக கூடுதலாக ரூ.200 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அந்நிறுவனம் மேற்கொண்ட மொத்த முதலீடு ரூ.3,200 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களிலேயே இதுவே மிக அதிகபட்ச முதலீடு என்று மெர்சிடிஸ்-பென்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
முக்கியத் தொழில்நுட்ப விவரங்கள்
விலை: ரூ.78.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
பேட்டரி பேக்: 94 kWh
ரேஞ்ச் (Range): 711 கி.மீ வரை (WLTP)
திறன் (Power): 360 kW (489 hp)
டார்க் (Torque): 800 Nm
வேகம் (0-100 கி.மீ/மணி): 4.3 வினாடிகள்
சார்ஜிங்: 330 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங் (10 நிமிடத்தில் 300 கி.மீ)
டிரைவ் டிரெய்ன்: இரட்டை-மோட்டார் AWD (4MATIC)













