- Home
- Auto
- 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், அட்வான்ஸ்டு டெக்னாலஜி: வெறித்தனமான தோற்றத்தில் வரும் ஃபோக்ஸ்வேகன்!
8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், அட்வான்ஸ்டு டெக்னாலஜி: வெறித்தனமான தோற்றத்தில் வரும் ஃபோக்ஸ்வேகன்!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது பிரபல செடான் காரான 'விர்ட்டஸ்' (Virtus) மாடலின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பிற்கான முதல் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட்
இந்தியாவில் செடான் கார்களை விரும்புவோர் மத்தியில் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ள வோக்ஸ்வாகன் விர்ட்டஸ் கார், விரைவில் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலாக விற்பனைக்கு வரவுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் தனது முதல் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் காரின் வெளிப்புற வடிவமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமான விர்ட்டஸ் காருக்கு தற்போதுதான் முதல்முறையாகப் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு வரவுள்ளன. ஏற்கெனவே பலமுறை சோதனை ஓட்டத்தின்போது கேமராவில் சிக்கியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டீசர் கார் பிரியர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிப்புற வடிவம் & புதிய மாற்றங்கள்
முன்பகுதி தோற்றம் - மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட முகப்பு விளக்குகள் (Headlamps) வழங்கப்பட்டுள்ளன. எல்இடி பகல்நேர விளக்குகள் (DRL) புதிய அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்போர்ட்டியான லுக் - கிரில் பகுதியில் ஃபோக்ஸ்வேகன் லோகோவுடன் சிவப்பு வண்ண 'GT' பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. பம்பரில் அகலமான காற்று உட்புகும் அமைப்பு, புதிய அலங்காரங்கள் மற்றும் சிறிய வடிவிலான பனி விளக்குகள் (Fog Lamps) கொடுக்கப்பட்டுள்ளன. இவை தற்போதைய மாடலை விட புதிய காருக்கு கூடுதல் ஆக்ரோஷமான தோற்றத்தைத் தருகின்றன.
பக்கவாட்டு அமைப்பு & அலாய் வீல்கள் - பக்கவாட்டு வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும், புதிய டிசைனிலான அலாய் வீல்கள் இடம்பெறுகின்றன. ஜிடி வேரியண்ட்டில் கருப்பு நிற அலாய் வீல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. டீசரில் காட்டப்பட்டுள்ள காரின் நீல வண்ண வெளிப்புற நிறமும் கவனத்தை ஈர்க்கிறது.
பின்பகுதி - பின்புறத்தில் புதிய எல்இடி டெயில் லைட் வடிவமைப்பு இடம்பெறுகிறது. வழக்கமான வெளி அமைப்பைத் தக்கவைத்துக்கொண்டு, உள்ளே இருக்கும் ஒளிரும் விளக்குகளின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பூட் லிட் பகுதியில் ஸ்பாய்லர் மற்றும் ஜிடி பேட்ஜ் தொடர்ந்து இடம்பெறுகின்றன. பின்பக்க பம்பரிலும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
உட்புறம் & தொழில்நுட்ப வசதிகள்
உட்புற வடிவமைப்பை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் வோக்ஸ்வாகன் டைகன் கார்களில் உள்ள புதிய வசதிகள் இதிலும் இடம்பெறலாம் எனக் கருதப்படுகிறது. பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம். 360 டிகிரி கேமரா, புதுப்பிக்கப்பட்ட மென்பொருள் வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏசி (AC) வசதி. தற்போதைய காரில் உள்ள 10.1 அங்குல தொடுதிரை, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் தொடர வாய்ப்புள்ளது.
எஞ்சின் & விலை விபரம்
புதிய விர்ட்டஸ் காரில் தற்போதைய 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்களே தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிகிறது.
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் - 115 எச்பி (HP) பவரையும், 178 என்எம் (Nm) டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் முக்கியமான மாற்றமாக, தற்போதுள்ள 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்குப் பதிலாக புதிய 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் - 150 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும். இதனுடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி (DSG) கியர்பாக்ஸ் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை விவரம் - அதிகாரப்பூர்வ அறிமுக தேதி, விலை மற்றும் வேரியண்ட்டுகள் குறித்த விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. தற்போதைய விர்ட்டஸ் காரின் விலை ரூ.10.71 லட்சம் முதல் ரூ.19.20 லட்சம் (Ex-showroom) வரை உள்ளது.













