நவம்பர் எஸ்யூவி ரேஸில் முதலிடம் பிடித்த நெக்ஸான்.. முழு பட்டியல் இதோ
2025 நவம்பரில் இந்திய ஆட்டோமொபைல் துறை 18.7% வளர்ச்சி கண்டது, இதில் எஸ்யூவி பிரிவு முக்கிய பங்கு வகித்தது. டாடா நெக்ஸான் மற்றும் பஞ்ச் ஆகியவை விற்பனை பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன.

எஸ்யூவி விற்பனை 2025 நவம்பர்
2025 நவம்பரில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் விற்பனை குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்துள்ளது. 2024 நவம்பரில் 3,51,592 பயணியர் வாகனங்கள் மட்டுமே விற்ற நிலையில், இந்த ஆண்டு அதே மாதத்தில் 4,17,495 யூனிட்கள் விற்பனையாகி, 18.7 சதவீத ஆண்டு வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. குறிப்பாக எஸ்யூவி பிரிவு சந்தையின் கவனத்தை மீண்டும் ஈர்த்து முன்னணியில் நின்றது.
டாடா நெக்ஸான்
நவம்பர் மாத எஸ்யூவி விற்பனை பட்டியலில் டாடா நெக்ஸான் மீண்டும் முதலிடம் பிடித்தது. மொத்தம் 22,434 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டைவிட மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து டாடாவின் பஞ்ச் மாடல் 18,753 யூனிட்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. பஞ்சம் கடந்த ஆண்டைவிட கனிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதால், எஸ்யூவி சந்தையில் டாடாவின் நிலை மேலும் வலுவாகியுள்ளது. 2026 தொடக்கத்தில் இந்த மாடலுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வரவிருக்கிறது.
ஹூண்டாய் கிரெட்டா
கொரிய வாகன பிராண்டான ஹூண்டாய் கிரெட்டா 17,344 யூனிட்கள் விற்பனையுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மஹிந்திராவின் ஸ்கார்பியோ 15,616 யூனிட்கள் விற்பனையுடன் 23 சதவீத உயர்வைக் காண நான்காவது இடத்துக்கு வந்தது. பழைய மாடலாக இருந்தாலும் ஸ்கார்பியோவின் தேவை குறையாமல் இருப்பது இந்த எண்ணிக்கை மூலம் தெளிவாகிறது. மாருதி சுசுகியின் ஃபிராங்க்ஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் விக்டர் மாடல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. அவை முறையே 15,058, 13,947 மற்றும் 12,300 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
ஃபிராங்க்ஸ்
ஃபிராங்க்ஸ் ஒரு சதவீத வளர்ச்சி பெற்ற நிலையில், பிரெஸ்ஸா 7 சதவீத சரிவைக் கண்டது. விக்டர் மிதமான நிலையை தக்கவைத்துள்ளது. கியா சோனெட் இந்த மாதத்தில் விற்பனையில் மிகப்பெரிய ஆண்டு உயர்வைக் கண்ட மாடல்களில் ஒன்று என்றே கூறலாம். 2024 நவம்பரில் 9,255 யூனிட்கள் விற்ற நிலையில், இம்முறை 12,051 யூனிட்கள் விற்பனையாகி 30 சதவீத உயர்வை எட்டியது. மேலும், சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் வென்யூ 11,645 யூனிட்களுடன் நிலையான விற்பனையைக் குறித்தது.
கிராண்ட் விட்டாரா
மாருதி கிராண்ட் விட்டாரா 11,339 யூனிட்கள் விற்பனையுடன் பட்டியலின் கடைசி இடத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 10,148 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதைப் பார்க்கும்போது, விட்டாரா சிறப்பான உயர்வை பதிவு செய்துள்ளது. மொத்தத்தில், 2025 நவம்பர் விற்பனை இந்திய எஸ்யூவி சந்தை தொடர்ந்து உயர்வை நோக்கிச் செல்வதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

