- Home
- Auto
- E85 Fuel: இனி பெட்ரோல் கவலை இல்லை! களமிறங்கியது E85 எரிபொருள்! லிட்டருக்கு ரூ.20 வரை சேமிக்கலாம்!
E85 Fuel: இனி பெட்ரோல் கவலை இல்லை! களமிறங்கியது E85 எரிபொருள்! லிட்டருக்கு ரூ.20 வரை சேமிக்கலாம்!
E85 Fuel: இந்தியாவில் பெட்ரோலுக்கு மாற்றாக E85 எரிபொருள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெட்ரோலை விட லிட்டருக்கு ரூ.20 குறைவு ஆகும். இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் E85 எரிபொருள்
இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் எரிபொருள் துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'E85 எரிபொருள்' (E85 Fuel) விற்பனை, தலைநகர் டெல்லியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. எத்தனால் கலப்புப் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, டெல்லியில் உள்ள பூசா ரோட்டில் இருக்கும் 'இந்தியன் ஆயில்' (Indian Oil) பங்க்கில், முதல் E85 விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.
விலை எவ்வளவு? பெட்ரோலை விட எப்படி மலிவு?
டெல்லியில் ஒரு லிட்டர் E85 எரிபொருளின் விலை ரூ.82.12 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது விற்பனையாகும் E20 பெட்ரோலை விட சுமார் ரூ.20 குறைவு ஆகும். வாடிக்கையாளர்களுக்குக் குழப்பம் ஏற்படாமல் இருக்க, E85 வழங்கும் டிஸ்பென்சர் மெஷின்களுக்குத் தனி பிராண்டிங் மற்றும் லேபிள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பை வலுப்படுத்துவதே அரசின் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
அடுத்தகட்ட விரிவாக்கத் திட்டங்கள்
பூசா ரோட்டில் உள்ள இந்த நிலையம் டெல்லியின் முதல் விற்பனை மையம் என்றாலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே. முதல் கட்டமாக, டெல்லி-என்.சி.ஆர் (Delhi-NCR) மற்றும் மும்பை-புனே-நாக்பூர் வழித்தடங்களில் சுமார் 50 முதல் 100 E85 பங்க்குகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தவும், 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சுமார் 5,000 E85 விற்பனை நிலையங்களைத் திறக்கவும் மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
சமீபத்தில், E22, E25, E27, E30 போன்ற அதிக எத்தனால் கலந்த எரிபொருள்களுக்கான தரங்களையும் அரசு அறிவித்துள்ளது. இது மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும்.
E85 என்றால் என்ன? இது ஏன் வித்தியாசமானது?
தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் E20 பெட்ரோலில் 20% எத்தனாலும், 80% பெட்ரோலும் உள்ளது. ஆனால், இப்போது அறிமுகமாகியுள்ள E85 எரிபொருளில் 85% எத்தனால் மற்றும் 15% பெட்ரோல் மட்டுமே இருக்கும். எத்தனால் உள்நாட்டிலேயே விவசாயப் பொருட்களிலிருந்து (Agricultural feedstocks) தயாரிக்கப்படுவதால், இது கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கும். இதன் மூலம் வாகன ஓட்டிகளின் தினசரி பயணச் செலவும் குறையும். இதன் குறைவான சில்லறை விலையே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகும்.
எந்த வாகனங்களுக்கு இது ஏற்றது?
சாதாரண பெட்ரோல் வாகனங்களில் E85 எரிபொருளைப் பயன்படுத்த முடியாது. இந்த அதிக எத்தனால் கலவையைத் தாங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் வாகனங்களில் (Flex-fuel vehicles) மட்டுமே இதை நிரப்ப முடியும். தற்போது இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் அல்லது விரைவில் வெளியாக உள்ள சில முக்கிய ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் வாகனங்கள்: மாருதி சுசுகி வேகன்ஆர் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் (இன்னும் வெளியாகவில்லை), ஹீரோ ஸ்பிளெண்டர்+ ஃப்ளெக்ஸ் ஃபியூயல், ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் மற்றும் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் எஃப்.எஃப்.வி (Gixxer SF FFV).
மாருதி சுசுகியின் வேகன்ஆர் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் கார், E100 வரையிலான எத்தனால் கலவையிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பயணிகள் கார் என்பதால், இது E85 எரிபொருளுக்கு முழுமையாகப் பொருந்தும்.
ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் மாடல் வாகனங்கள்
மறுபுறம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பிரபலமான 100 சிசி பிரிவில் ஸ்பிளெண்டர்+ மற்றும் ஹெச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளின் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் மாடல்களை அறிமுகப்படுத்தி, இந்தியாவின் முதல் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் பைக் தயாரிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த பைக்குகள் E20 முதல் E85 வரையிலான எந்த எரிபொருளிலும் இயங்கும். இவை ஜூலை 2026 முதல் டெல்லி மற்றும் மகாராஷ்டிராவின் குறிப்பிட்ட பகுதிகளில் விற்பனைக்கு வரும்.
இந்தியா ஏற்கெனவே குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே நாடு முழுவதும் E20 பெட்ரோல் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இப்போது அடுத்த கட்டத்திற்குத் தயாராகி வருகிறது. வரும் ஆண்டுகளில் அதிக ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் வாகனங்கள் சந்தைக்கு வரும்போது, E85 எரிபொருள் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த செலவில் ஒரு சிறந்த மாற்று எரிபொருளாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

