50% விற்பனை சரிவை சந்தித்த ஓலா.. இவி ஸ்கூட்டர் சந்தையில் புதிய ராஜா யார்?
2025-ல் இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஓலா எலக்ட்ரிக் 50% மேல் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், ஒட்டுமொத்த இந்திய இவி சந்தை 11% வளர்ச்சி கண்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் விற்பனை
2025-ம் ஆண்டு இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் சந்தையில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்த ஆண்டாக அமைந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்ட சமீபத்திய விற்பனைத் தகவல்கள், சந்தையின் முன்னணி நிறுவனங்களின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. ஒருகாலத்தில் சந்தையை ஆதிக்கம் செலுத்திய ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) இந்த ஆண்டு கடும் சரிவை சந்தித்துள்ளது என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
2025-ல் ஓலா எலக்ட்ரிக்கின் மொத்த விற்பனை 1.99 லட்சம் யூனிட்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. கடந்த 2024-ல் 4.07 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த விற்பனையுடன் ஒப்பிடும்போது, இது 50 சதவீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சியாகும். இந்த சரிவு இருந்தாலும், ஓலா எலக்ட்ரிக் இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. ஆனால், அதன் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை
இதற்கு மாறாக, ஏதர் எனர்ஜி (Ather Energy) 2025-ல் வலுவான முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஆண்டு விற்பனை 2 லட்சம் யூனிட்களை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 58 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியை ஈத்தர் பதிவு செய்யும்போது. ஏத்தர் ரிஸ்டா மற்றும் 450 சீரிஸ் போன்ற மாடல்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதன் மூலம் ஈத்தர், ஓலாவை முந்தி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
சந்தையின் முதலிடத்தை டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS Motor Company) தக்க வைத்துள்ளது. 2025-ல் டிவிஎஸ்ஸின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை 2.98 லட்சம் யூனிட்களை எட்டியுள்ளது. ஐக்யூப் போன்ற பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை, டிவிஎஸ்ஸை முதலிடத்தில் நிலைநிறுத்தியுள்ளது. மேலும், பஜாஜ் ஆட்டோ சேத்தக் இவி மாடலின் உதவியுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
மிக வேகமான வளர்ச்சியை ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) பதிவு செய்தது. விடா பிராண்டின் கீழ் அறிமுகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் காரணமாக, ஹீரோவின் விற்பனை மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்க, 2025-ல் இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தை 11 சதவீதத்திற்கு அதிக வளர்ச்சியை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சில நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்தாலும், இந்தியாவின் இவி சந்தை தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

