ஆட்டோமேட்டிக் வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி… விலை ரூ.27,000 உயர்வு
ஹூண்டாய் நிறுவனம் 2026 Grand i10 Nios மாடலில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த அப்டேட்டில், மலிவு விலை ஆட்டோமேட்டிக் மாடலான Magna AMT நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோமேட்டிக் காரின் ஆரம்ப விலை உயர்ந்துள்ளது.

ஹூண்டாய் இந்தியா, 2026 மாடல் Grand i10 Nios காரை அமைதியாக அப்டேட் செய்துள்ளது. இதற்கான புதிய வேரியன்ட் பட்டியல் மற்றும் பவர்டிரெய்ன் விவரங்கள் சமீபத்தில் வெளியான பிரசுரத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை ஹூண்டாய் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், டீலர் மட்டத்தில் கிடைக்கும் தகவல்களுடன் இந்த அப்டேட் ஒத்துப்போகிறது. இதில் சில முக்கிய வேரியன்ட்கள் நீக்கப்பட்டுள்ளது, விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
இந்த அப்டேட்டில் கவனிக்கத்தக்க முக்கிய மாற்றம் Magna AMT வேரியன்ட் நிறுத்தப்பட்டிருப்பதாகவும். இதற்கு முன், Grand i10 Nios வரிசையில் மிகவும் மலிவு விலையில் கிடைத்த ஆட்டோமேட்டிக் மாடல் இதுவாகும். இந்த வேரியனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.85 லட்சமாக இருந்தது. இப்போது இந்த ஆப்ஷன் நீக்கப்பட்டதால், ஆட்டோமேட்டிக் நியோஸ் வாங்க நினைப்பவர்களுக்கு ஆரம்ப விலையே உயர்ந்துள்ளது.
தற்போது Grand i10 Nios ஆட்டோமேட்டிக் காரின் தொடக்க விலை சுமார் ரூ.27,000 அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் AMT வேரியன்ட் தான் இப்போது எண்ட்ரி-லெவல் ஆட்டோமேட்டிக் மாடலாக உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.12 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், குறைந்த பட்ஜெட்டில் ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றம் சற்று ஏமாற்றமாக இருக்கலாம்.
மேலும், உயர்ந்த வேரியன்ட்களில் பவர்டிரெயின் தேர்வுகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. SX(O) Connect மற்றும் SX(O) Connect Knight டிரிம்கள் இனி பெட்ரோல் மேனுவலில் கிடைக்காது. இவை தற்போது AMT கியர்பாக்ஸுடன் மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும், CNG மாடலிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிங்கிள்-சிலிண்டர் CNG ஆப்ஷன் நிறுத்தப்பட்டு, இப்போது டூயல்-CNG டேங்க் அமைப்பே வழங்கப்படுகிறது.

