- Home
- Auto
- Hyundai Loniq 5 Facelift: ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்.. சென்னை-கோவை வரை போகலாம்! மாஸ் காட்டும் புதிய எலெக்ட்ரிக் கார்
Hyundai Loniq 5 Facelift: ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்.. சென்னை-கோவை வரை போகலாம்! மாஸ் காட்டும் புதிய எலெக்ட்ரிக் கார்
Hyundai Loniq 5 Facelift: இந்தியாவில் 2026 ஹூண்டாய் ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.55.7 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் 84.0kWh பெரிய பேட்டரி பேக்குடன் வருகிறது, இது 690 கிமீ வரை அதிக ரேஞ்சை வழங்குகிறது.

ஹூண்டாய் ஐயோனிக் 5
இந்திய சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து முதல்முறையாக மிகப்பெரிய அப்டேட்களை பெற்ற ஐயோனிக் 5 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய 2026 மாடல் ஹூண்டாய் ஐயோனிக் 5 ரூ.55.7 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கார் குறித்த புதிய அம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
ஹூண்டாயின் E-GMP (Electric-Global Modular) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில், செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு என பல விஷயங்களில் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கார், அப்சிடியன் பிளாக் கேபின் தீம் மற்றும் டைட்டன் கிரே, கிராவிட்டி கோல்டு மேட், மிட்நைட் பிளாக் பெர்ல், ஆப்டிக் ஒயிட் என நான்கு வெளிப்புற கலர்களில் கிடைக்கும்.
பெரிய பேட்டரி மற்றும் அதிக ரேஞ்ச்
இந்த அப்டேட்டின் மிக முக்கியமான அம்சம், அதன் 84.0kWh பேட்டரி பேக் தான். இது ARAI சான்றிதழின்படி, ஒருமுறை சார்ஜ் செய்தால் 690 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது. "இந்த மேம்பாடு அதிக வசதியை உறுதி செய்வதோடு, ரேஞ்ச் பற்றிய கவலையையும் குறைக்கிறது. இதனால் நீண்ட தூர எலக்ட்ரிக் பயணங்கள் முன்பை விட எளிதாகிறது என்று ஹூண்டாய் நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், இந்திய-ஸ்பெக் மாடலின் அதிகாரப்பூர்வ பவர் மற்றும் டார்க் புள்ளி விவரங்களை ஹூண்டாய் இன்னும் வெளியிடவில்லை. உலகளவில், 84.0kWh பேட்டரி பேக் கொண்ட மாடல் 229bhp பவரையும், 350Nm டார்க்கையும் வழங்குகிறது.
மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங்
புதிய 2026 ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் வெளிப்புறத்தில், முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள், புதிய ஸ்கிட் பிளேட்கள், புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள், புதிய ஹைடெக் வி-கார்னிஷ் லைட்டிங் டிசைன் மற்றும் ஒரு புதிய ரியர் ஸ்பாய்லர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இருப்பினும், காரின் அடையாளமான பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் லைட்டிங் அப்படியே தொடர்கிறது.
புதுமையான இன்டீரியர்
4-டாட் பிக்சல் லைட் டிசைன் மற்றும் ஹீட்டிங் செயல்பாட்டுடன் கூடிய புதிய த்ரீ-ஸ்போக் லெதர் ஸ்டீயரிங் வீல் மூலம் காரின் இன்டீரியர் இப்போது மேலும் நவீனமாக காட்சியளிக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்காக டூயல் 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. வயர்லெஸ் சார்ஜிங் பேடும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் சீட்களுக்கான பட்டன்களும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
புதிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம்
வசதிகளைப் பொறுத்தவரை, புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5-ல் கனெக்டட் கார் நேவிகேஷன் காக்பிட் (ccNC), கண்ட்ரோலர் ஓவர்-தி-ஏர் (C-OTA) அப்டேட்ஸ், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆக்டிவ் சவுண்ட் டிசைன் (ASD), ஹூண்டாய் ப்ளூலிங்க் வழியாக ரிமோட் இம்மொபிலைசேஷன் மற்றும் புதிய இன்-கார் பேமெண்ட் வசதி ஆகியவை உள்ளன. மேலும், இந்த அப்டேட்டட் எஸ்யூவி மாடலில், பார்க்கிங் செய்யும்போது ஏற்படும் மோதலைத் தவிர்க்கும் அசிஸ்ட் - ரியர் (Parking Collision-Avoidance Assist - Rear) மற்றும் பார்க்கிங் டிஸ்டன்ஸ் வார்னிங் (PDW - Side) போன்ற பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் சொல்வது என்ன?
புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 அறிமுகம் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும், சிஇஓ-வுமான தருண் கார்க் கூறுகையில் "எலக்ட்ரிக் மொபிலிட்டியை மறுவரையறை செய்யும் எங்கள் நிறுவனத்தின் பார்வைக்கு ஹூண்டாய் ஐயோனிக் 5 ஒரு உண்மையான சான்றாகும். உலகளவில் பல அங்கீகாரங்களுடன், மதிப்புமிக்க 'World Car of the Year' பட்டத்தையும், இந்தியன் கார் ஆஃப் தி இயர் விருதுகளில் 'Green Car of the Year' விருதையும் வென்ற ஐயோனிக் 5, வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மையில் புதிய தரங்களை அமைத்துள்ளது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 மூலம், டிரைவிங் ரேஞ்ச், தொழில்நுட்பம் மற்றும் தினசரி வசதியை அதிகரிக்கும் அர்த்தமுள்ள தயாரிப்பு மேம்பாடுகளை வழங்குவதன் மூலம் இந்த வலுவான அடித்தளத்தை நாங்கள் உருவாக்குகிறோம். இந்த மேம்பாடுகள் பிரீமியம் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான எலக்ட்ரிக் எஸ்யூவி என்ற ஐயோனிக் 5-ன் கவர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் குறிப்பிட்டார்.

