1 லட்சம் பேர் வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஓலாவுக்கு தண்ணி காட்டிய நிறுவனம் எது தெரியுமா?
ஆண்டின் தொடக்கத்தில் மெதுவாக இருந்த விற்பனை, ஜூலைக்குப் பிறகு அபரிமிதமாக உயர்ந்து, ஓலா போன்ற போட்டியாளர்களை முந்தி இந்த நிறுவனத்தை முதல் 5 இடங்களுக்குள் கொண்டு வந்துள்ளது.

1 லட்சம் விற்பனையான ஸ்கூட்டர்
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் தேவை வேகமாக உயர்ந்து வரும் நிலையில், ஹீரோ நிறுவனத்தின் விடா மாடல் இந்த ஆண்டு பங்களிப்பை காட்டியுள்ளது. ஓலா, பஜாஜ், டிவிஎஸ் போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு போட்டியாக, விடா 2025-ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து கனிசமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மின்சார பிரிவில் இருந்தாலும், ஹீரோ மோட்டோகார்ப் இதுவரை ஒரு ஆண்டில் இந்த அளவு விற்பனை செய்தது இதுதான் முதல் முறை. வாகன போர்ட்டல் தரவின்படி, ஜனவரி 1 முதல் டிசம்பர் 5 வரை 1,00,383 விடா ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. 2022 அக்டோபரில் அறிமுகமானதில் இருந்து மொத்தமாக விடா மாடலின் விற்பனை 1.5 லட்சத்தை கடந்துள்ளது.
மொத்த விற்பனை
2022 நவம்பர் முதல் 2024 டிசம்பர் வரை 55,033 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களிலும் 5 நாட்களிலும் மட்டும் 1 லட்சம் விற்பனை முடிந்தது. இது மொத்த விற்பனையின் 65% ஆகும். ஆகவே, இந்த ஆண்டின் இறுதியில் விடா மாடல் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது.
ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஆண்டின் தொடக்கத்தில் மிக மெதுவாக விற்பனையானது, ஜூலைக்கு பிறகு தாறுமாறாக உயர்ந்தது. ஜனவரியில் 1,626 விற்பனையான நிலையில், மார்ச் முதல் ஜூன் ஒவ்வொரு மாதமும் 6,000-ஐ கடந்தது. ஜூலையில் முதல் முறையாக 10,000 யூனிட்களை தாண்டியது; அக்டோபரில் 16,017 விற்பனை சாதனையாகும். டிசம்பர் முதல் 5 நாட்களில் 1,984 யூனிட்களும் சேர்க்கப்பட்டன.
ஓலாவை கடந்தது
மிகவும் முக்கியமாக, ஹீரோ ஓலாவை முந்தியது பெரும் கவனத்தை பெற்றது. ஜனவரியில் 7-வது இடம் பிடித்த நிறுவனம், சில மாதங்களில் 5-வது இடத்திலும், நவம்பரில் ஓலாவை முந்தி 4-வது இடத்திலும் நிலைபெற்றது. 2025-இல் இந்தியாவில் மொத்தம் 11.9 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் டிவிஎஸ் 23%, பஜாஜ் 21%, ஓலா 16%, ஆதார் 15% மற்றும் ஹீரோ 8% சந்தைப் பங்குடன் 1 லட்சம் விற்பனை செய்துள்ளது 5 முன்னணி நிறுவனங்களில் இணைத்துள்ளது.

