பட்ஜெட் விலையில் பக்கா சேஃப்டி: ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்!
புதிய கார் வாங்கும் போது பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாரத் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த SUV கார்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சத்திற்குள் டாப் 5 கார்கள்
புதிய கார் வாங்கும்போது விலை, மைலேஜ் மற்றும் வசதிகளுக்கு அடுத்தபடியாகப் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது. குறிப்பாக, குடும்பத்துடன் பயன்படுத்தும் SUV கார்களில் விபத்து நேரத்தில் பயணிகளை எந்த அளவுக்குப் பாதுகாக்கிறது என்பது முக்கியமான முடிவெடுக்கும் காரணியாக மாறியுள்ளது.
இந்த நிலையில், Bharat NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற SUV கார்களில், ரூ.10 லட்சத்திற்குள் எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட குறிப்பிட்ட வேரியண்ட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு ரூ.10 லட்சம் என்பது சென்னை எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டதுடன், ஒவ்வொரு காரிலும் அந்தப் பாதுகாப்பு மதிப்பீடு பொருந்தும் வேரியண்ட்டையே கணக்கில் எடுத்துள்ளோம்.
டாடா பன்ச் (Tata Punch)
பாதுகாப்பு ரேட்டிங் - Bharat NCAP சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 30.58-க்கு 30.58 மதிப்பெண்களும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49-க்கு 45 மதிப்பெண்களும் பெற்று 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த மதிப்பீடு Smart உள்ளிட்ட குறிப்பிட்ட பெட்ரோல் மற்றும் CNG வேரியண்ட்டுகளுக்குப் பொருந்தும்.
விலை & சிறப்பம்சங்கள் - சென்னையில் 5 ஸ்டார் மதிப்பீடு பொருந்தும் Smart 1.2 பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.75 லட்சமாக உள்ளது. இது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் CNG தேர்வுகளில் கிடைக்கிறது. இதில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி (ABS with EBD), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.
ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq)
Bharat NCAP சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32-க்கு 30.88 மதிப்பெண்களும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49-க்கு 45 மதிப்பெண்களும் பெற்று 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. முக்கியமாக, Classic வேரியண்ட்டும் இந்த மதிப்பீடு பொருந்தும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
விலை & சிறப்பம்சங்கள்: சென்னையில் கைலாக் Classic 1.0 TSI பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.59 லட்சமாக உள்ளது. இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 114 எச்பி ஆற்றலை வழங்குகிறது. இதில் 6 ஏர்பேக்குகள், டிராக்ஷன் கண்ட்ரோல், மல்டி கொலிஷன் பிரேக் மற்றும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா XUV 3XO (Mahindra XUV 3XO)
பாதுகாப்பு ரேட்டிங் - Bharat NCAP சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32-க்கு 29.36 மதிப்பெண்களும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49-க்கு 43 மதிப்பெண்களும் பெற்று 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. MX1 பெட்ரோல் மேனுவல் உள்ளிட்ட பல வேரியண்ட்டுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
விலை & சிறப்பம்சங்கள் - சென்னையில் MX1 1.2 டர்போ பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை சுமார் ரூ.7.79 லட்சமாக உள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல், டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. இதில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவற்றுடன் பாதசாரிகள் பாதுகாப்புக் குறித்தான அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
புதிய ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue)
பாதுகாப்பு ரேட்டிங் - புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ Bharat NCAP சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32-க்கு 31.15 மதிப்பெண்களும், சிறார்களுக்கான பாதுகாப்பில் 49-க்கு 44.46 மதிப்பெண்களும் பெற்று 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. குறிப்பாக, HX2 பெட்ரோல் வேரியண்ட்டும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
விலை & சிறப்பம்சங்கள் - சென்னையில் HX2 1.2 பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. இதில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி, வாகன நிலைத்தன்மை மேலாண்மை, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் 3 புள்ளி சீட் பெல்ட் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாகும்.
டாடா நெக்ஸான் (Tata Nexon)
பாதுகாப்பு ரேட்டிங் - Bharat NCAP சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32-க்கு 29.41 மதிப்பெண்களும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49-க்கு 43.83 மதிப்பெண்களும் பெற்று 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. Smart பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டும் இதில் இடம்பெற்றுள்ளது.
விலை & சிறப்பம்சங்கள் - சென்னையில் Smart 1.2 டர்போ பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.40 லட்சமாகும். இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் CNG தேர்வுகள் உள்ளன. மேலும், 6 ஏர்பேக்குகள், ESC, ISOFIX போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்களுடன் பல்வேறு வேரியண்ட் தேர்வுகளும் நெக்ஸானின் பலமாக உள்ளன.

