வெறும் 6 மாதத்தில் 2 லட்சம் யூனிட்கள் விற்ற ஏத்தர் ரிஸ்டா.. ஸ்கூட்டர் விலை எவ்வளவு?
ஏத்தர் எனர்ஜியின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், 2 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 1 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

ஏத்தர் ரிஸ்டா
இந்தியாவின் வேகமாக வளரும் மின்சார இருசக்கர வாகன சந்தையில், அதிரடி சாதனை படைத்த மாடலாக ஏத்தர் ரிஸ்டா திகழ்கிறது. ஏத்தர் எனர்ஜி, தனது பிரபலமான இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிஸ்டாவின் விற்பனை 2 லட்சத்தை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே மாதத்தில் 1 லட்சம் விற்பனையை கடந்த இந்த மாதம், வெறும் ஆறு மாதங்களில் மேலும் 1 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. நிறுவனம் தற்போது விற்பனை செய்யும் மொத்த வாகனங்களில் 70 சதவீதத்திற்கும் மேல் பங்கினை ரிஸ்டா பெற்றுள்ளது.
விற்பனையில் வளர்ச்சி
2024 ஏப்ரலில் அறிமுகமான ரிஸ்டா, தென் இந்தியாவைத் தாண்டி மத்திய இந்தியா மற்றும் வட இந்தியாவிலும் ஏத்தரின் சந்தை நிலையை வலுப்படுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் FY26 முதல் காலாண்டில் 7 சதவீதமாக இருந்த பங்கு, மூன்றாம் காலாண்டில் 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் 8ல் இருந்து 15 சதவீதமாகவும், உத்தரப்பிரதேசத்தில் 4ல் இருந்து 10 சதவீதமாகவும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ரிஸ்டா ஸ்கூட்டர் விலை
ரிஸ்டாவின் வெற்றிக்கு காரணமாக அதன் புதிய நிற விருப்பங்களும், பேட்டரி வகைகளும் குறிப்பிடப்படுகின்றன. டெரகோட்டா ரெட் நிற மாடல் மற்றும் 3.7 kWh பேட்டரி கொண்ட ரிஸ்டா எஸ் போன்ற பதிப்புகள் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. ரிஸ்டா எஸ் 123 கி.மீ., ரிஸ்டா இசட் 159 கி.மீ. வரையிலான IDC ரேஞ்சை வழங்குகின்றன. 56 லிட்டர் ஸ்டோரேஜ், ஸ்கிட் கண்ட்ரோல், ஃபால் சேப்டி போன்ற அம்சங்களும் உள்ளன. டெல்லியில் இந்த ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை 1.22 லட்சம் முதல் 1.75 லட்சம் வரை உள்ளது.
ஏத்தர் ரிஸ்டா விற்பனை
ரிஸ்டா அறிமுகத்திலிருந்து ஏத்தர் தன் ரீட்டெயில் நெட்வொர்க்கை 524 சென்டர்களாக விரிவுபடுத்தி வருகிறது. நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏத்தர் தற்போது நேபாளம், இலங்கை போன்ற சர்வதேச சந்தைகளிலும் ரிஸ்டாவை விற்பனை செய்து வருகிறது.

