ஏதர் 450X இப்போது இன்னும் ஸ்மார்ட்.. காரணம் இந்த அப்டேட் தான்!
நகரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த அம்சம், பிரேக் பிடித்தாலும் வேகத்தை மாற்றினாலும் அணையாமல் தொடர்ந்து இயங்கும். இந்த அப்டேட் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படுகிறது.

ஏத்தர் 450X அப்டேட்
ஏதர் எனர்ஜி தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக புதிய OTA (Over-The-Air) மென்பொருள் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டின் மூலம், Ather 450X மாடலில் ‘இன்ஃபினிட் குரூஸ்’ என்ற புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அப்டேட் கிடைக்கும் போது, ஸ்கூட்டரின் டிஜிட்டல் டாஷ்போர்டில் ரைடர்களுக்கு அறிவிப்பு வரும். 2025 ஜனவரி 1க்கு பிறகு 450X வாங்கிய 44,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் ஸ்கூட்டர் தேவையான ஹார்ட்வேர் ஆதரவைக் கொண்டிருந்தது, இந்த அம்சம் தானாகவே செயல்படுத்தப்படும் என ஏத்தர் தெரிவித்துள்ளது.
இன்ஃபினிட் குரூஸ்
இந்த இன்ஃபினிட் குரூஸ் வசதி முதலில் 2025 ஆகஸ்டில் Ather Apex 450 மாடலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அதையே 450X-க்கும் விரிவுபடுத்தியுள்ளது. வழக்கமாக குரூஸ் கண்ட்ரோல் நெடுஞ்சாலைப் பயணங்களுக்காக இருக்கும். ஆனால், இன்ஃபினிட் குரூஸ் நகரப் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ முதல் 90 கி.மீ வேகம் வரை செயல்படும். ரைடர் பிரேக் பிடித்தாலும் அல்லது வேகத்தை அதிகரித்தாலும், இந்த அமைப்பு அணையாமல் தொடர்ந்து இயங்கும் என்பதே இதன் சிறப்பு.
ஏதர் OTA அப்டேட்
சாதாரண குரூஸ் கண்ட்ரோலில் மீண்டும் மீண்டும் ரீசெட் செய்ய வேண்டிய அவசியம் இதில் இல்லை. புதிய வேகத்திற்கு தானாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் இதில் உள்ளது. சிட்டி குரூஸ், சரிவுகளில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை பயன்படுத்தும் ஹில் கண்ட்ரோல், மோசமான சாலைகளில் மெதுவாக செல்ல உதவும் கிரால் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படும் இந்த வசதி, நெரிசலான நகரச் சாலைகளில் ஓட்டுநரின் சோர்வை குறைக்கிறது. ரெயின், ரோடு, ராலி மோடுகளுடன் வரும் இந்த அமைப்பைக் கொண்ட Ather 450X ஸ்கூட்டரின் விலை ரூ.1,47,998 முதல் தொடங்குகிறது.

