- Home
- Astrology
- Sani Bhagavan: சூரியனின் வெப்பமும், சாயா தேவியின் தவமும்.! சனி பகவான் கரிய நிறமாக மாறிய கதை.! பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Sani Bhagavan: சூரியனின் வெப்பமும், சாயா தேவியின் தவமும்.! சனி பகவான் கரிய நிறமாக மாறிய கதை.! பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Why Shani Dev is Black: இந்து புராணங்களின்படியும், ஜோதிட சாஸ்திரங்களின்படியும் சனி பகவான் கருப்பு நிறமாக இருப்பதற்கு பின்னால் சுவாரஸ்யமான ஆன்மீக கதைகளும், தத்துவ காரணங்களும் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Why Shani Dev is Black - சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன?
வேத ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். அவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார். மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்பதால் ‘மந்தன்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குவதால் கர்ம காரகன் அல்லது நீதிமான் என்று அறியப்படுகிறார். ஒருவருக்கு சனி திசை நடக்கும் பொழுது அவர்களுக்கு பல கஷ்டங்களை சனி பகவான் அளிக்கிறார். இது அவர்களை தண்டிப்பதற்காக அல்ல. அவர்கள் கடந்த கால தவறுகளில் இருந்து தங்களை திருத்திக் கொள்வதற்கு அவர் அளிக்கும் ஒரு வாய்ப்பாகும்.

சனி பகவானின் தந்தை யார்?
பலருக்கும் சனி பகவான் ஏன் கருப்பு நிறமாக அல்லது அடர் நீல நிறமாக இருக்கிறார் என்ற சந்தேகம் இருக்கும். அதற்கான சுவாரஸ்ய பின்னணி குறித்து இங்கு காணலாம். சனி பகவானின் நிறத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவருடைய பிறப்பு பற்றிய கதை. புராணங்களின்படி தக்ஷ ராஜாவின் மகளான சஞ்ஜா தேவி சூரிய பகவானை திருமணம் செய்து கொண்டார். சூரிய பகவானின் ஒளி (தேஜஸ்) அளப்பரியதாக இருந்தது. இதனால் சஞ்ஜா தேவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். சூரியனின் உஷ்ணத்தை குறைக்க அவர் விரும்பினார். சில காலத்திற்குப் பின்னர் சூரிய பகவான் சஞ்ஜா தம்பதியினருக்கு வைவஸ்த மனு, எமதர்மன், யமுனை ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
சனி பகவானின் தாய் சாயா தேவி
சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சஞ்ஜா தேவி அதை எப்படி குறைப்பது என்றே சிந்தித்துக் கொண்டிருந்தார். இறுதியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னுடைய தவ சக்தியால் தன்னைப் போலவே உருவம் கொண்ட ஒரு பெண்ணை உருவாக்கினார். அவளுக்கு ஸவர்ணா (நிழல் போன்றவள் என்பதால் சாயா தேவி) என்று பெயரிட்டார். சஞ்ஜா தேவி தன் குழந்தைகள் மற்றும் சூரிய பகவானை பராமரிக்கும் பொறுப்பை சாயாவிடம் ஒப்படைத்துவிட்டு ரகசியமாக தன் தந்தையின் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவரது தந்தை மீண்டும் கணவரிடம் திரும்பி போகுமாறு சஞ்ஜாவை பணித்தார். ஆனால் சூரியலோகம் செய்த விரும்பாத சஞ்ஜா தேவி ஒரு அடர்ந்த காட்டுக்குள் பெண் குதிரை வடிவம் (அஸ்வினி) எடுத்து தீவிர தவம் செய்யத் தொடங்கினார்.
சாயா தேவியின் வயிற்றில் சனி பகவான்
சாயா தேவி பார்ப்பதற்கு அப்படியே சஞ்ஜாவைப் போல இருந்ததால் சூரிய பகவானுக்கு சந்தேகம் எழவில்லை. சாயா நிழல் வடிவமாக இருந்ததால் சூரியனின் அசாத்திய வெப்பத்தால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சூரிய பகவான் மற்றும் சாயா தேவியின் இணைப்பால் மனு, சனி பகவான், பத்ரா ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தனர். சனி பகவான் அன்னை சாயாவின் கருவில் இருந்த போது சாயா தேவி சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் மேற்கொண்டார். தவக்காலத்தில் உணவு, உறக்கம் என அனைத்து உலக இன்பங்களையும் துறந்தார். கடுமையான வெயில், பனி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அவர் செய்த தீவிர தவம் மற்றும் யோக அனுஷ்டானங்களில் தாக்கம் அவரது கருவில் வளர்ந்த குழந்தையின் நிறத்தை மாற்றியது.
சியாமள வர்ணமாக மாறிய சனி பகவான்
சாயா தேவியின் வயிற்றில் வளர்ந்த சனி பகவானின் நிறம் முற்றிலும் கருத்த நிறமாக (சியாமள வர்ணமாக) மாறியது. இதனால் அவர் பிறக்கும்பொழுது முற்றிலும் கரிய நிறத்தில் பிறந்தார். சனி பகவான் பிறந்த பிறகு அவர் முதன்முதலாக தனது தந்தை சூரிய பகவான் மீது தனது பார்வையை செலுத்தினார். சனி பகவானின் பார்வையின் சக்தியால் சூரியனின் ஒளி மங்கியது. இதனால் கோபமடைந்த சூரிய பகவான் சாயா தேவியின் கற்பின் மீது சந்தேகம் கொண்டு இந்த குழந்தை தன்னுடைய மகனே இல்லை என்று மறுத்தார். ஆனால் சூரிய பகவானின் கோபம் எல்லையை கடந்ததால் சிவபெருமான் நேரில் தோன்றி, சனி பகவானின் மகிமைகள் குறித்து சூரிய பகவானுக்கு எடுத்துரைத்தார்.
சூரிய பகவானை சமாதானம் செய்த சிவபெருமான்
சிவபெருமான் நேரில் தோன்றி, “இந்தக் குழந்தை சாதாரணமானவன் அல்ல. இவன் மிகச் சிறந்த தவசி. நீதியை நிலை நாட்டுபவன். மனிதர்களுக்கு கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தரும் காரகன்” என்று விளக்கினார். அதன் பின்னரே சூரிய பகவான் சனியை தன் மகனாக ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல் சிவபெருமான் சனி பகவானுக்கு நவக்கிரகங்களில் முக்கிய இடத்தை வழங்கியதோடு, பிரபஞ்சத்தின் நீதிபதி பதவியையும் அளித்தார். அது முதல் மனிதர்கள் செய்யும் நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்ப சனி பகவான் தகுந்த பலன்களை வழங்கி வருகிறார்.
நீதிமானாக விளங்கும் சனி பகவான்
இந்து புராணங்களின்படி வர்ணங்களுக்கு சில குணாதிசயங்கள் உண்டு. இந்த கருப்பு என்பது நாம் நினைப்பது போல அசுபமான நிறம் அல்ல. அது பிரபஞ்சத்தின் ஆழமான தத்துவத்தை குறிக்கிறது. கருப்பு நிறம் அனைத்து வண்ணங்களையும் தனக்குள்ளே ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. சனி பகவான் ராஜா, பணக்காரன், ஏழை, நல்லவர், கெட்டவர் என்று யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப நீதியை வழங்குவார். இந்த நடுநிலைமையை குறிக்கவே அவர் கருப்பு நிறமாக இருக்கிறார். பிரபஞ்சம் உருவாகுவதற்கு முன்பாக அனைத்தும் இருளாக (கருமையாக) இருந்தது. எல்ராவற்றையும் கடந்து நிற்கும் எல்லையற்ற காலத்தைக் குறிக்கும் நிறம் கருப்பு. காலத்தின் அதிபதிகளில் ஒருவரான சனிக்கு இந்த நிறம் பொருத்தமானது.
சனி பகவானை வழிபடும் முறைகள்
நவகிரகங்களில் சனி பகவான் சூரியனிடமிருந்து தொலைவில் இருக்கும் ஒரு கிரகம் ஆவார். சூரிய ஒளியானது குறைவாகவே சனி கிரகத்தின் மீது படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானுக்கு கருப்பு அல்லது அடர் நீல நிறம் ஒதுக்கப்பட்டுள்ளது. சனி பகவான் கருப்பு நிறத்தோடு தொடர்புடையவர் என்பதால் கருப்பு எள் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடை அணிவது, ஏழைகளுக்கு கருப்பு நிற ஆடைகள் வழங்குவது சனியின் தாக்கத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. அவருடைய வாகனமான காகமும் கருப்பு நிறத்தை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு நிறம் மட்டுமல்ல: அது ஆன்மீக குறியீடு
சனி பகவானின் கருப்பு நிறம் என்பது வெறும் தோற்றம் மட்டுமல்ல. அது கர்ம வினையின் ரகசியத்தையும், அனைவரையும் சமமாக நடத்தும் உன்னதமான நீதியையும், அகந்தையை அளிக்கும் ஆன்மீக வைராக்கியத்தையும் நமக்கு உணர்த்தும் ஒரு குறியீடாகும்.
குறிப்பு: இந்தக் கட்டுரை முற்றிலும் ஜோதிட செய்திகள் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. வாசகர்கள் கூடுதல் தகவல்களுக்கு பஞ்சாங்கம், சாஸ்திரங்கள் அல்லது ஆன்மீகப் பெரியோர்களை அணுகி அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

