- Home
- Astrology
- Astrology: 2026-ல் சூரிய பகவானால் நடக்கும் மாற்றம்.! 5 ராசிக்காரர்கள் அம்பானியாக மாறப்போறீங்க.!
Astrology: 2026-ல் சூரிய பகவானால் நடக்கும் மாற்றம்.! 5 ராசிக்காரர்கள் அம்பானியாக மாறப்போறீங்க.!
Surya Peyarchi 2026 in mesha rasi: 2026 ஆம் ஆண்டில் சூரிய பகவான் தனது உச்ச ராசியான மேஷ ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். அது குறித்தும், அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரிய பெயர்ச்சி 2026
நவகிரகங்களில் முதன்மையானவராக சூரிய பகவான் கருதப்படுகிறார். இவர் கிரகங்களின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் ஒரு மாத காலம் சஞ்சரிப்பார். இவர் ராசி மாறும் பொழுது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுமார் ஒரு மாதம் அதாவது மே 15, 2026 வரை மேஷ ராசியில் பயணிப்பார்.
சூரிய பெயர்ச்சி பலன்கள்
மேஷ ராசி என்பது சூரியனின் உச்ச நிலையாகும். அதாவது அங்கு சூரியன் தனது அதிகபட்ச பலத்துடன் இருப்பார். இந்த சஞ்சாரம் பொதுவாக அனைவருக்கும் அதிக ஆற்றல், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, தைரியம், புதிய முயற்சிகளை தொடங்கும் உத்வேகம் ஆகியவற்றை தரும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளை பெற உள்ளனர். அவற்றில் சில முக்கியமான ராசிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தலைமைப் பண்பு வெளிப்படும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கிச் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புக்கள், சலுகைகள் கிடைக்கும். ஆற்றல் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சூரிய பகவானில் அருளால் புதிய உத்வேகம் பிறக்கும்.
மிதுனம்
சூரியன் மிதுன ராசியின் 11வது வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே மிதுன ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த கனவுகள் நிறைவேறத் தொடங்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் உருவாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கு சிறப்பான காலமாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்களை அனுபவிப்பீர்கள். புதிய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு தொழில் விரிவடையும். லாபம் பெருகும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களின் கனவு நனவாகும்.
சிம்மம்
சிம்ம ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். சிம்ம ராசியின் அதிபதியும் சூரியன் என்பதால் சிம்ம ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளை அனுபவிப்பீர்கள். அதிர்ஷ்டம் எல்லா வகையிலும் துணை நிற்கும். தந்தை வழி மூலம் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள், பிரச்சனைகள் தீர்க்கப்படும். சொத்துக்கள் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது அல்லது சொத்துக்கள் மூலம் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேர வாய்ப்பு உள்ளது. திருமண வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

