- Home
- Astrology
- Astrology: 2026-ல் 3 முறை வக்ர பெயர்ச்சியாகும் புதன்.! இந்த 5 விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.!
Astrology: 2026-ல் 3 முறை வக்ர பெயர்ச்சியாகும் புதன்.! இந்த 5 விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.!
Budhan Vakra Peyarchi Rasi Palangal: 2026 ஆம் ஆண்டில் முதல் பகவான் மூன்று முறை வக்ர கதியில் சஞ்சரிக்க இருக்கிறார். புதன் பகவானின் இந்த சஞ்சாரத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

புதன் வக்ர பெயர்ச்சி 2026
வேத ஜோதிடத்தில் புதன் பகவான் முக்கிய கிரகமாகவும், விஷ்ணுவின் அம்சமாகவும் அறியப்படுகிறார். இவர் தகவல் தொடர்பு, வணிகம், புத்திசாலித்தனம், கல்வி, ஒப்பந்தங்கள் மற்றும் பயணங்கள் ஆகியவற்றை குறிக்கிறார். புதன் பகவான் வக்ர நிலையை அடையும் பொழுது மேற்குறிப்பிடப்பட்ட காரகங்களில் குழப்பங்கள், தாமதங்கள் அல்லது மறுபரிசீலனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புதன் பகவானின் வக்ர காலம் என்பது தடைகள் நிறைந்த காலம் அல்ல. இது கடந்த கால விஷயங்களை மீண்டும் ஆராயவும், சரி செய்யவும், மறுபரிசீலனை செய்யவும், மீண்டும் தொடங்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 2026 ஆம் ஆண்டு புதன் மூன்று முறை வக்ர நிலையை அடைகிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புதன் வக்ர பெயர்ச்சி 2026 - முக்கிய நேரம் மற்றும் தேதி
பஞ்சாங்கத்தின்படி பிப்ரவரி 26, 2026 அன்று மதியம் 12:17 மணிக்கு புதன் பகவான் வக்ர நிலையை அடைகிறார். சுமார் 23 நாட்களுக்குப் பிறகு மார்ச் 21, 2026 அன்று அதிகாலை 01:02 மணிக்கு நேரடி நிலைக்கு திரும்புகிறார். பின்னர் ஜூன் 29, 2026 இரவு 11:05 மணிக்கு தொடங்கி ஜூலை 24, 2026 காலை 04:27 மணிக்கு நேரடி நிலைக்கு திரும்புகிறார். இந்த இரண்டாவது வக்ர நிலை 25 நாட்கள் நீடிக்கும். புதனின் மூன்றாவது வக்ர பயணம் அக்டோபர் 24, 2026 அன்று மதியம் 12:41 மணிக்குத் தொடங்கி நவம்பர் 13, 2026 இரவு 09:22 மணிக்கு முடிவடையும். இது மொத்தம் 21 நாட்கள் நீடிக்கும்.
புதன் வக்ர பெயர்ச்சி காலத்தில் என்ன செய்ய வேண்டும்?
புதன் பகவானின் வக்ர பெயர்ச்சியின் பொழுது தாமதம், குழப்பம் ஆகியவை அனைத்து ராசிகளுக்கும் பொதுவானதே. இந்த காலகட்டத்தில் மின்னஞ்சல்கள், சட்ட ஆவணங்கள், பயண முன் பதிவுகளை இரண்டு முறை சரி பார்க்க வேண்டும். புதிய தொழில் தொடங்க இருப்பவர்கள், பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருப்பவர்கள் அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் இந்த காலத்தை தவிர்க்க வேண்டும். உங்கள் பழைய திட்டங்கள் அல்லது முடிக்கப்படாத வேலைகளைப் பற்றி மறுபரிசீலனை செய்து முடிக்க முயற்சிக்க வேண்டும். பேசும்பொழுதும், எழுதும் பொழுதும் மிக கவனமாக இருக்க வேண்டும். அமைதியை கடைப்பிடித்து உள் வளர்ச்சிக்காக தியானம் செய்ய வேண்டியது அவசியம்.
புதன் வக்ர பெயர்ச்சியால் பலன்பெறும் ராசிகள்
புதன் பகவானின் வக்ர காலம் சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான விளைவுகளையும், முன்னேற்றத்தையும், வாய்ப்புகளையும் அளிக்கும். அந்த ராசிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
ரிஷபம்: வக்ர நிவர்த்திக்குப் பின்னர் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய தெளிவு கிடைக்கும். நிலுவையில் உள்ள பணம் அல்லது முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி, சரியான பாதைக்கு திரும்புவீர்கள். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.
மகரம்: புதன் பகவானின் வக்ர நிவர்த்தி மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். எழுத்து, ஊடகம், தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு மிகவும் நன்மை நிறைந்த காலமாக இருக்கும். வக்ர நிவர்த்திக்குப் பின்னர் தொழில் ரீதியான சரியான முடிவுகளை எடுத்து முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர பெயர்ச்சி மறுபரிசீலனை செய்யக்கூடிய காலத்தை வழங்கும். பழைய தவறுகளை உணர்ந்து அவற்றை சரி செய்வீர்கள். வருமானம் மற்றும் தொழில் ரீதியாக நேர்மறையான முடிவுகளையும் காண்பீர்கள்.
மிதுனம் & கன்னி: மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருவதால் வக்ர பெயர்ச்சி காலத்தில் முதலில் சவால்களை சந்தித்தாலும் வக்ர நிவர்த்திக்குப் பிறகு தெளிவு கிடைக்கும். உறவுகள் மற்றும் கூட்டாளிகளில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான முடிவுகளை காண்பீர்கள். பண பரிவர்த்தனைகள் முதலீடுகள் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான விஷயங்களில் இருந்த மந்த நிலை விலகி அதிக லாபம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

