- Home
- Astrology
- 2026 Meena Rasi Palan: குறி வச்சா இரை விழணும்.! 2026-ல் சொல்லி அடிக்கும் கில்லியாக மாறும் மீன ராசியினர்.!
2026 Meena Rasi Palan: குறி வச்சா இரை விழணும்.! 2026-ல் சொல்லி அடிக்கும் கில்லியாக மாறும் மீன ராசியினர்.!
2026 Meena Rasi Palan in Tamil: 2026 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, வேலை மற்றும் தொழில், செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 Meena Rasi Palan in Tamil
நல்ல உள்ளம் படைத்த மீன ராசிக்காரர்களே 2026 ஆம் ஆண்டு உங்கள் செல்வாக்கை உயர்த்தி தரும் ஆண்டாக அமைய இருக்கிறது. எந்த ஒரு செயலை எடுத்தாலும், அதில் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றியைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு சுகபோகமான வாழ்க்கை உண்டாகும். உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உங்கள் பேச்சிலும் செயலிலும் அறிவு மேம்படும். 2026 ஆம் ஆண்டு சவாலான தொடக்கத்தையும், மகிழ்ச்சியான மாற்றங்களை கொண்டு வரும். இரண்டாம் பாதி உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரப் போகிறது.
குரு பகவான் சஞ்சார பலன்கள்:
ஜூன் 2, 2026 வரை மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் அதன் பிறகு கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்க இருக்கிறார். இது உங்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய இருக்கிறது. இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்கள் திறமைகள் வெளிப்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
சமூகத்தில் புகழ், அந்தஸ்து, கௌரவம் உயரும். அரசு சார்ந்த சலுகைகள் கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுவதால் புத்திர பாக்கியம் கிடைக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு குருவின் பார்வை கிடைப்பதால் வேலையில் இருந்த தடைகள் நீங்கும். அக்டோபர் மாதத்திற்கு பிறகு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். கடந்த கால கடன்கள், நிதி சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத அளவிற்கு விரயங்களும் ஏற்படலாம். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புகளும் உருவாகும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு ஜூன் மாதத்திற்கு பிறகு நல்ல சூழல் ஏற்படும். வருடத்தின் இரண்டாம் பாதியில் நீண்ட கால முதலீடுகளில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும்.
சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்ய நேரிடலாம். அதிர்ஷ்ட பொருட்கள், பணம், நகை, உபரி வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
மீன ராசிக்கு 2026 ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே அமர இருக்கிறார். இது சில பொறுப்புகளையும், பாடங்களையும் கற்றுத் தர இருக்கிறது. சனியின் தாக்கத்தால் குடும்பத்தில் சிறிய விவாதங்கள் வரலாம். நிதானமாக பேசுவது நல்லது.
ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும் ஆண்டாக இருக்கும். வாத தோஷம், கால் வலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஜென்ம சனியின் காலம் என்பதால் எதிலும் அவசரம் காட்டுதல் கூடாது. பெரிய முதலீடுகளை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து அதன் பின்னர் செய்ய வேண்டும்.
இருப்பினும் சனி பகவான் உங்களுக்கு சில புண்ணியங்களையும் தர இருக்கிறார். திருமண முயற்சிகளில் இருந்து தடைகள் நீங்கும். திருமணத்திற்காக பண உதவி கிடைக்கும். சிலர் வீட்டின் கிரக பிரவேசத்திற்கு தயாராவீர்கள். தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம்.
தாயின் அன்பும், தாய் வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உங்கள் பிள்ளைகள் சொத்து சுகங்களை வாங்குவார்கள். இதனால் மண மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் மீண்டும் தாயகம் திரும்பலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நீடிக்கும். பேச்சில் நிதானம் தேவை. ஜென்ம சனியால் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் குருவின் பார்வை இருப்பதால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.
ராகு/கேது சஞ்சார பலன்கள்:
2026 ஆம் ஆண்டு துவக்கத்தில் பன்னிரெண்டாம் வீட்டில் ராகு பகவானும், ஆறாம் வீட்டில் கேது பகவானும் நின்று பலன் தருவார்கள். டிசம்பர் 5 2026-க்கு பின்னர் ராகு பகவான் 11 வது வீடான லாப ஸ்தானத்திலும், கேது பகவான் ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள்.
லாப ஸ்தானத்தில் ராகு பகவான் மாறிய பின்னர் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்படும். தொழில் செய்பவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவது நல்லது. தந்தை தொழில் மூலமாக அனுகூலம் உண்டாகும்.
பழைய கடன்கள் அடைக்கப்படும். வீடு கட்டும் செலவு அல்லது வீட்டின் சுப நிகழ்ச்சிகளுக்காக செலவுகள் ஏற்படலாம். பணவரவு அதிகமாக இருந்தாலும், அதற்கு ஏற்ற வகையில் செலவுகளும் ஏற்படும்.
வீண் செலவுகளால் மன அமைதி குறையலாம். முன்கோபத்தால் பகைமை உருவாகும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். கணவர் வீட்டு உறவினர்களால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையலாம். காரியத்தில் தேவையில்லாத தடைகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் அதிகரிக்கக்கூடும்.
பரிகாரங்கள்:
தினமும் மாலை சரபேஸ்வரரை வழிபட ஏற்படும் இன்னல்கள் விலகும். வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகப்பெருமானை வணங்க கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பிட்டு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சாற்றி வழிபட இனம் புரியாத பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். மாற்றுத்திறனாளிகள் அல்லது ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நற்பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

