- Home
- Astrology
- 2026 Makara Rasi Palan: சொல்லி அடிக்கப்போகும் மகர ராசி.! இந்த வருஷம் அரசு வேலை கண்டிப்பா கிடைக்கும்.!
2026 Makara Rasi Palan: சொல்லி அடிக்கப்போகும் மகர ராசி.! இந்த வருஷம் அரசு வேலை கண்டிப்பா கிடைக்கும்.!
2026 Makara Rasi Palan in Tamil: 2026 ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, வேலை மற்றும் தொழில், செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 Makara Rasi Palan in Tamil
தங்களது கடின உழைப்பினால் காரியத்தை சாதிக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் 2026-ல் நடக்கும். நீங்கள் வேலை செய்யும் துறையில் சாதனை படைத்து புகழை அடைவீர்கள். உடலளவிலும், மனதளவிலும் புதிய உற்சாகம் பிறக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், பலமும் உண்டாகும். அனைவரும் வியக்கும் வகையில் வாழ்க்கையில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கத் தொடங்கும்.
குரு பகவான் சஞ்சார பலன்கள்:
மே மாதம் வரை குரு பகவான் ஆறாம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். ஜூன் மாதம் முதல் ஏழாம் வீடான சம சப்தம ஸ்தானத்தில் உச்சமடைந்து ராசியை பார்க்கிறார். இதன் காரணமாக உங்களின் ஆன்ம பலம் பெருகி, தைரியத்துடன் முடிவுகளை எடுப்பீர்கள்.
குடும்ப உறவுகள் மற்றும் உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். உடலில் இருந்த நோய்கள், மன சஞ்சலங்கள், கவலைகள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, புதிய தெம்பு பிறக்கும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தடைபட்டு நின்ற சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு ஞாபக சக்தி குறைவு, கண், காது, மூக்கு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அடமானத்தில் இருந்த வீட்டை மீட்பீர்கள்.
அடகு கடையில் தூங்கிக் கொண்டிருந்த நகை, வாகனம், நில பத்திரம் அனைத்தும் மீண்டும் வீட்டிற்கு வந்து சேரும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். கூலித் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் உயரும்.
கல்லூரி அல்லது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. 2026 ஆம் ஆண்டில் ஆனந்தமான வாழ்க்கை அமையும். சிலர் வாழ்க்கைத் துணையின் பெயரில் தொழில் தொடங்குவீர்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
2026 ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். தொழில் மேம்படும். அரசாங்க முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும்.
தொழிலில் எதிரிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடுவீர்கள். வாழ்க்கைத் துணைவியால் நேர்மறையான மாற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். ஏற்கனவே செய்த பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். வீடு கட்டுவதற்குத் தேவையான பண உதவிகள் கிடைக்கும்.
சனி பகவானின் நிலை காரணமாக உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் அகலும். வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவார்கள். புதிய சொத்துக்கள் சேரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடி வந்தவர்களின் வாழ்க்கையில் வளம் சேரும். சிலர் கூட்டாக தொழில் தொடங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள் அனைவருடன் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.
சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து, கேரன்டி கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். உயர்கல்வி அல்லது உத்தியோகத்திற்காக வெளியூர் செல்ல நேரிடலாம்.
ராகு/கேது சஞ்சார பலன்கள்:
ஆண்டின் தொடக்கத்தில் குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவானும், அஷ்டம ஸ்தானத்தில் கேது பகவானும் சஞ்சரிக்கிறார்கள். இதன் காரணமாக தாமதமான முயற்சிகள் மீண்டும் வேகமெடுக்கும். குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும்.
சொத்து, சுகம் தடையில்லாத வருமானம் கிடைக்கும். குடும்ப பாரம் குறையும். வீண் பிடிவாதம், முன் கோபம் ஆகியவை தணியும். மனதில் தர்ம சிந்தனைகள் மேலோங்கும். இதன் காரணமாக பிறருக்கு தாராளமாக உதவி புரிவீர்கள்.
பணி மாறுதல் அல்லது வீடு மாறுதலுக்காக இடம் பெயர நேரிடலாம். பணம் கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். பிற மொழிகளை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்கள் திட்டமிட்டு காய் நகர்த்த வேண்டிய காலமாகும்.
இரண்டாம் இடத்தில் இருக்கும் ராகு பகவான் நிறைவேற்ற முடியாத வாக்கை கொடுக்க வைக்க நேரிடலாம். எட்டாம் இடத்தில் இருக்கும் கேது மூலம் வம்பு வழக்கு ஏற்படலாம். எனவே பேச்சில் தெளிவும், நிதானமும் இருக்க வேண்டும். வாக்கில் சுத்தம் இருக்க வேண்டும். தூய்மையான மனதுடன் செயல்பட்டால் 2026 ஆம் ஆண்டில் வெற்றி உங்கள் வசமாகும்.
பரிகாரங்கள்:
வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் அகல்வதற்கு கால பைரவரை வழிபடலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது அல்லது கேட்பது மிகவும் நல்லது. குலதெய்வ வழிபாடு செய்வது சிறந்தது. பிரதோஷ காலங்களில் விரதம் இருந்து நந்தியையும், சிவபெருமானையும் வழிபடுவதால் விருப்பங்கள் நிறைவேறும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நற்பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

