- Home
- விவசாயம்
- Agriculture: இனி கேரட் ஜூஸ் ஆரஞ்சு நிறத்தில் இருக்காது.! சந்தைக்கு வரப்போகும் கருப்பு கேரட் .! அசத்தும் தோட்டக்கலைத்துறை.!
Agriculture: இனி கேரட் ஜூஸ் ஆரஞ்சு நிறத்தில் இருக்காது.! சந்தைக்கு வரப்போகும் கருப்பு கேரட் .! அசத்தும் தோட்டக்கலைத்துறை.!
குன்னூர் சிம்ஸ் பூங்காவில், தோட்டக்கலைத்துறை முதல்முறையாக கருப்பு கேரட்டை பயிரிடும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி ஊட்டச்சத்து நிறைந்த கருப்பு கேரட்டின் மூலம் உள்ளூர் சந்தையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலர் மாறும் கேரட்
கேரட் என்றாலே ஆரஞ்சு நிறமே நம் கண்முன்னே தோன்றும். ஆனால் நீலகிரி மாவட்டத்தில் இப்போது அந்த எண்ணம் மாறியுள்ளது. முதன்முறையாக கருப்பு நிற கேரட் பயிரிடும் முயற்சியில் தோட்டக்கலைத்துறை ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய முற்றியில் ஈடுபட்டுள்ள தோட்டக்கலைத்துறை
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள நர்சரி பகுதியில்தான் இந்த புதிய முயற்சி நடைபெற்று வருகிறது. வடஇந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் இந்த கருப்பு கேரட் விதைகள் டெல்லி வழியாக வரவழைக்கப்பட்டு, நர்சரியில் சிறப்பாக தயார் செய்யப்பட்ட மண்ணில் விதைக்கப்பட்டுள்ளன. மண்ணின் வளத்தை அதிகரிக்க முற்றிலும் இயற்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மண்ணுயிர் உரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
உள்ளூர் சந்தையில் விற்பனை
பூங்கா மேலாளர் லட்சுமணன் தலைமையில் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் இந்த முயற்சி, நீலகிரி காலநிலைக்கு இந்த பயிர் எவ்வாறு பொருந்தும் என மதிப்பீடு செய்யும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது. கருப்பு கேரட் சாதாரண கேரட்டுகளைப் போலவே 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும் என்பதால், இதன் உற்பத்தி திறன் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வடமாநிலங்களில் இந்த கருப்பு கேரட் ‘கஞ்சி’, ‘ஹல்வா’, கேக் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நிறத்திலும், சுவையிலும், ஊட்டச்சத்திலும் தனித்தன்மை கொண்ட இக்கேரட், நீலகிரியில் உற்பத்தி ஆன பின்னர் உள்ளூர் சந்தையிலும் புதிய மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
கவர்ந்து இழுக்கும் கருப்பு கேரட்
இளஞ்சிவப்பு (ஆரஞ்சு) கேரட் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நீலகிரியில், இப்போது கருப்பு நிற கேரட் தோன்றத் தொடங்கியிருப்பது மாவட்ட விவசாயத்துறைக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. சோதனை வெற்றிகரமாக முடிந்தால், பெரிய அளவில் விவசாயிகள் மத்தியில் இதை பரப்பும் திட்டமும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

