சரியான பருவம், சொட்டுநீர் பாசனம் போன்ற நவீன முறைகள், மற்றும் நகர்ப்புற சந்தைகளின் அதிக தேவை ஆகியவை புதிய விவசாயிகளுக்குக் கூட அரை ஏக்கரில் லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்ட உதவுகிறது.

“விவசாயம் கடினம்” என்பதே பலரின் மனதில் பதிந்த கருத்து. ஆனால் உண்மையில், பயிரை சரியான நேரத்தில், சரியான முறையில் செய்து விட்டால் விவசாயம் மிகவும் லாபகரமாக இருக்கும். அதற்குதான் எடுத்துக்காட்டாக குடைமிளகாய் சாகுபடி பேசப்படுகிறது. சிவப்பு, மஞ்சள் போன்ற நிறமுடைய ஹைப்ரிட் குடைமிளகாய்க்கு நகர்ப்புற சந்தைகளிலும், ஹோட்டல்கள், சூப்பர்மார்கெட்டுகளிலும் மிகப்பெரிய தேவை உள்ளது. 

இந்த தேவை காரணமாகவே குறைந்த பரப்பில் கூட பெரிய வருமானம் பெற முடிகிறது. பல புதிய விவசாயிகள் அரை ஏக்கர் நிலப்பரப்பில் மட்டும் குடைமிளகாய் பயிரிட்டு, 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நிகர லாபம் ஈட்டி வருகின்றனர். குடைமிளகாய் சாகுபடிக்கு செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை காலம் மிகவும் உகந்தது. இந்த மாதங்களில் காலநிலை சாதகமாக இருக்கும், அதனால் நாற்று வளர்ச்சி மற்றும் காயதரு திறன் அதிகரிக்கும். 

அரை ஏக்கர் விளை நிலத்தில் சாகுபடி செய்ய வேண்டுமானால் சுமார் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை முதலீடு போதும். இதில் தரமான விதைகள், தேவையான உரங்கள், மண் சத்துக்கேற்ப நுண்ணுயிர் உரங்கள், மற்றும் சொட்டுநீர் பாசன அமைப்பின் செலவுகளும் அடங்கும். குடைமிளகாய் தண்ணீர் அதிகம் தேவைப்படாததால், சொட்டுநீர் பாசன முறை நீரையும், நேரத்தையும் சேமிக்கும் சிறந்த நடைமுறையாக கருதப்படுகிறது.

நாற்றுகளை நடும் போது 1.5 அடி இடைவெளி கொடுத்தால் செடிகளுக்கு போதுமான காற்றோட்டமும், வெப்ப ஒளியும் கிடைக்கும். இதனால் நோய்த்தொற்றுகள் குறைந்து விளைச்சல் அளவு அதிகரிக்கும். பொதுவாக நாற்று நடவு செய்த 40-45 நாட்களுக்குப் பிறகு செடிகளில் பூக்கள் தோன்றத் தொடங்கும். இரண்டு மாதங்களில் குடைமிளகாய் பச்சையாக உருவாகும். அதன் பின் நிறம் மாறி சிவப்பு அல்லது மஞ்சள் நிறம் பெறும். இந்த நிறமாற்றத்தில்தான் சந்தை விலையும் அதிகரிக்கும். 

நல்ல பராமரிப்பில், ஒரு செடி சராசரியாக 1.5 முதல் 2 கிலோ வரை குடைமிளகாய் தர முடியும். சென்னை, பெங்களூர், மும்பை, புனே போன்ற பெரிய நகரங்களில் குடைமிளகாய்க்கு வருடம் முழுவதும் தொடர்ந்து தேவை உள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் உயரும் நிலையில், விவசாயிகளுக்கு நிலையான வருமான வாய்ப்பாக குடைமிளகாய் திகழ்கிறது. 

குறிப்பாக சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய் ஹோட்டல்கள், பீட்சா கடைகள், ஃபாஸ்ட்-ஃபுட் நிறுவனங்கள், குளிர்சாதனப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் இவர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சரியான நேரத்தில் மொத்த சந்தையில் விற்றால் கிலோக்குக் கூடுதல் விலையும் கிடைக்கும். குறைந்த பரப்பில் அதிக லாபம் தேடும் புதிய தலைமுறை விவசாயிகளுக்கு குடைமிளகாய் சாகுபடி ஒரு “ஸ்மார்ட் ஃபார்மிங்” தீர்வாகி வருகிறது.