பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஓரளவுக்கு சமநிலை இருக்கும். இருதரப்புமே தங்கள் நியாயங்களை எடுத்து வைப்பார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியில் முழுக்க ஒருபக்கமாகவே போய்விட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

லிவிங் டுகதெர் உறவுமுறையில் இருப்பவர்கள் பற்றிய பார்வையை முதல் கேள்வியிலேயே கள்ள உறவு, முறையற்ற காதல் என்றெல்லாம் சொல்லி எதிர் வரிசையினர் எள்ளி நகையாடி விட்டனர். லிவிங் டுகதெருக்காக பேசியவர்களிடமும் இது எங்கள் சுதந்திரம் என்பதைத் தாண்டி வேறு கருத்துகளே இல்லை.

நிகழ்ச்சியை நடத்திய கோபிநாத்தும் லிவிங் டுகதருக்காக பேசிய ஒருவரிடம் உங்கள் காதலி பெயரைச் சொல்லமுடியுமா என்று கேள்வி எழுப்பினார். தன் மகன் லிவிங் டுகதர் உறவில் இருக்கிறான் என்பதைச் சொன்ன ஒரு தாயிடம் உங்கள் மகள் அப்படி இருந்தால் ஏற்றுக் கொள்வீர்களா..? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். இது முழுக்க ஒருபக்க சாய்வாகவே பட்டது. (அந்தப் பெண்மணி தன் மகனைப் பற்றிச் சொன்னதுமே உங்கள் ‘மருமகளின்’ பெற்றோர் மனநிலையை என்றைக்காவது அறிந்து கொள்ள முயற்சித்தீர்களா என்று கேட்டிருந்தால்கூட அவர் பெண்களுக்கு லிவிங் டுகதெர் எத்தகைய சிக்கலை உண்டாக்கும் என்று யோசித்ததாக புரிந்து கொள்ளலாம்.)

மனதுக்குப் பிடித்த பையனும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கும் உடன்போக்கு நம் சங்க காலத்திலேயே இருந்திருக்கிறது. அப்போது ஆண் பெண் என்பதைத் தவிர வேறெந்த வேறுபாடும் இருக்கவில்லை. அதன்பிறகு சாதி வந்தபோது சுய சாதி திருமணம்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் வந்தது. அதை எதிர்ப்பவர்கள் சமூக விரோதிகளாக பார்க்கப்பட்டார்கள்.

அடுத்ததாக வசதி வாய்ப்புகள் கணக்கில் வந்தன. சுய சாதியாக இருந்தாலும் அந்தஸ்து பொருந்தி வரவில்லை என்றால் அந்தத் திருமணம் செல்லுபடி ஆகாது என்ற நிலை ஏற்பட்டது. (இந்த நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குனர் கரு.பழனியப்பன்கூட லிவிங் டுகதெரிலேயே லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்களோடு சேர்ந்து வாழமாட்டார்கள். அங்கே சம அந்தஸ்து இருந்தால்தான் சாத்தியம் என்ற கருத்தை முன் வைத்தார். பெருமளவில் ஓரிடத்தில் பணியாற்றி பழகியவர்கள்தான் இந்த உறவு முறைக்குள் இருக்கிறார்கள். அதனால் அந்தஸ்து சமமாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அப்படி இல்லாத லிவிங் டுகதெர் இணை யாரேனும் இருந்தால் புதிய செய்தியாக தெரிந்து கொள்ளலாம்)

இந்த இரண்டு சமூக நிலைகளுக்கு எதிராக போராடியதுதான் காதல். வேற்று சாதியினராக இருந்தாலும் அந்தஸ்து நிலையில் ஏற்ற தாழ்வு இருந்தாலும் எங்களுக்குள் மனம் பொருந்திப் போகிறது. நாங்கள் மணந்து கொள்கிறோம் என்று சொல்லும் இணை காதல் திருமணங்கள் செய்யத் தொடங்கின. இன்னமும் ஆணவக் கொலைகளும் அந்தஸ்து கொலைகளும் நடந்தாலும் காதல் என்பது வெளிப்படையான அடையாளம் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

ஏன் காதல் ஏற்பட்டது. விரும்பியவனை/ளை மணக்க முடியாத சமூகச் சூழல் குறுக்கிடும்போது காதல் உள்ளே வருகிறது. பழைய உடன்போக்கு காலம் போல இருந்திருந்தால் இது இயல்பான ஒன்றாக இருந்திருக்கும்.
சரி, மீண்டும் நீயா நானாவுக்கு வருகிறேன்.

திருமண முறையே சிறந்தது என்று பேசிய யாருக்குமே ஏன் இந்த எதிர்வரிசைக்காரர்கள் திருமண முறை மீது ஒவ்வாமை கொள்கிறார்கள் என்ற அக்கறையே எழவில்லை. ஒருவர் என் உறவில் யாரேனும் எதிர் வரிசையில் இருந்தால் அடித்துவிட்டுதான் பேசுவேன் என்கிறார். மற்றவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்கள் கருத்து அதுதான்.

தன் குடும்பத்தில் அக்கா, அண்ணன், மாமா, சித்தி… குடும்பத்துக்கு வெளியே உறவுகள், அக்கம்பக்கத்து வீட்டினர், உடன் பணியாற்றுவோர், தோழர்கள், தோழிகள் என்று பலரும் திருமணம் என்ற கட்டுக்குள் சிக்கி தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த கதைகளைக் கண்கூடாக அவர்கள் பார்த்திருப்பார்கள். அச்சச்சோ… திருமணம் இத்தனை பெரிய கால் விலங்கா… நாமும் அதை ஏன் மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.

லிவிங் டுகதெருக்கு எதிர்வரிசையில் இருந்த யாருமே, ‘எனக்கு இத்தனை வயதில் திருமணம் நடந்தது… என் வாழ்க்கையை நீங்கள் சொல்வதைவிட அதிக மகிழ்ச்சியுடன் கழிக்கிறேன்… எனக்கு இந்த வீட்டுக்குள் நீங்கள் சொல்வது போன்ற அத்தனை உரிமைகளும் சுதந்திரமும் தடையின்றி கிடைக்கிறது… என்னால் நானாக இந்த திருமண முறைக்குள் வாழமுடிகிறது. திருமண வாழ்க்கை என்பது அத்தனை அற்புதமான விஷயம்’ என்று சொல்லவே இல்லை. கோபிநாத்தும் அதைக் கேள்வியாகக் கேட்கவில்லை. (கரு.பழனியப்பன் மட்டும் என் வீட்டில் நான் தோசை சுடுவேன் என்றார்)

மிக அருமையான தலைப்பு… ஆனால், அணுகிய விதத்தில் கோளாறு என்றே எனக்குத் தோன்றுகிறது. நம் திருமண முறைகளில் உள்ள சிக்கல்களை எடுத்துச் சொல்லி, இதை நீங்கள் சரி செய்யாவிட்டால் இதுபோன்ற லிவிங் டுகதெர் வாழ்க்கை முறையை நீங்கள் கேள்வி கேட்க முடியாது என்ற எச்சரிக்கையைச் சொல்லியிருக்க வேண்டும் என்பதே என் கருத்து!
ஆபரேஷன் சக்சஸ்… ஆனால், பேஷண்ட் காலி!
முகநூலில் முருகேஷ் பாபு